மாசடைந்த நீரை திறந்து விட்டது பாகிஸ்தான்

மாசடைந்த நீரை திறந்து விட்டது பாகிஸ்தான்

1 mins read
0c351e02-b70b-4db2-b148-fada48f59787
-

சண்டிகர்: தனது பதனிடும் நிலையங்களில் இருந்து சட்லஜ் நதியில் மாசடைந்த நீரை பாகிஸ்தான் தரப்பு திறந்து விட்டுள்ளது இயற்கை ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சனிக்கிழமை அன்று இந்நதியில் நீர்வரத்து திடீரென அதிகரித்தது. இந்நிலையில் பாகிஸ்தான் எல்லையோரக் கிராமத்தில் அமைந்துள்ள பதனிடும் நிலையங்களில் இருந்து மாசடைந்த நீர் திறந்து விடப்பட்டதாக இந்திய எல்லையில் அமைந்துள்ள ஃபெரோஸ்புர் பகுதி இணை ஆணையர் சந்தர் கைன்ட் தெரிவித்துள்ளார்.

எல்லைப் பகுதியில் உள்ள வாய்க்கால்கள் மூலம் இந்த மாசடைந்த நீரை சட்லஜ் நதியில் கலக்க வைத்துள்ளது பாகிஸ்தான்.

திடீரென திறந்து விடப்பட்ட மாசடைந்த நீரின் வரத்தால் பஞ்சாப் மாநில எல்லையில் இருக்கும் ஏரிக்கரைகள் சேதமடைந்தன. இதையடுத்து அவற்றைப் பலப்படுத்துமாறு அம்மாநில முதல்வர் அமரிந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.

ராணுவத்துடன் இணைந்து இப்பணியை மேற்கொள்ளுமாறு அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். இந்திய எல்லையில் உள்ள டென்டிவாலா பகுதியில், சட்லஜ் நதி இந்தியாவுக்குள் பாய்கிறது. மாசடைந்த நீர் கலந்து வரும் வெள்ளத்தால் சுகாதாரக் கேடுகள் ஏற்படாத வண்ணம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பஞ்சாப் மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே பஞ்சாப்பின் பல்வேறு பகுதிகள் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து நிவாரணப் பணிகளுக்காக மத்திய அரசிடம் ஆயிரம் கோடி ரூபாய் நிதி கேட்டுள்ளது அம்மாநில அரசு.

வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிட மத்திய அரசுக் குழு அம்மாநிலத்துக்குச் செல்கிறது.