வாகனங்களுக்கு அபராதம்: சரத்பவார் மகள் அதிருப்தி

வாகனங்களுக்கு அபராதம்: சரத்பவார் மகள் அதிருப்தி

1 mins read
56f829ac-f02c-460a-bb84-55534891e3ec
முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே. -

மும்பை: முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலேவின் பிரசாரக் கூட்டத்துக்கு வந்த தொண்டர்களின் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்பவாரின் மகளும், எம்பியுமான சுப்ரியா சுலே, அம்மாநிலத்தில் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை இப்போதே தொடங்கி உள்ளார்.

சோலாப்பூர் பகுதியில் அவர் பங்கேற்ற பிரசாரக் கூட்டம் இந்திய மருத்துவக் கழக வளாகத்தில் நடைபெற்றது.

இதில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இளையரணியினர் திரளாகக் கலந்து கொண்டனர். அவர்கள் வந்த வாகனங்கள் அரங்குக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில் அனுமதியற்ற நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்ட அந்த வாகனங்களுக்கு போலிசார் அபராதம் விதித்தனர்.

அவற்றுள் சுப்ரியாவின் வாகனமும் அடங்கும். ஆனால் போலிசார் வேண்டும் என்றே இவ்வாறு நடவடிக்கை எடுத்திருப்பதாக சுப்ரியாவின் ஆதரவாளர்கள் சாடியுள்ளனர்.

இதனால் தேர்தல் நெருங்குவதற்கு முன்பே மகாராஷ்டிர அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.