இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் பழனியப்பன் சிதம்பரத்தை ஆகஸ்ட் 30 வரை காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பில் சென்ற வியாழக் கிழமை அன்று கைது செய்யப்பட்டு ஐந்து நாட்களுக்கு சிபிஐ காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார் ப.சிதம்பரம். தொடர்ந்து அவரை ஆகஸ்ட் 30 வரை காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் சிபிஐக்கு அனுமதி வழங்கியுள்ளது.
சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து அவர் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவரை நேற்றுவரை காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. அவரின் காவல் முடிவடைவதால் சிபிஐ தலைமையகத்திலிருந்து நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டார்.
தங்கள் விசாரணை முடிவடையவில்லை என்று கூறி சிதம்பரத்தை மேலும் ஐந்து நாட்களுக்குக் காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி கோரியது சிபிஐ.
காவலில் வைத்து சிதம்பரத்திடம் பெருமளவில் விசாரணை ஏதும் நடத்தப்படவில்லை. மொத்தம் 26 மணிநேரம்தான் விசாரணை நடந்தது என்றும் இதனை சிபிஐ பெரிதுபடுத்துகிறது என்றும் சிதம்பரம் சார்பில் வாதிட்டார் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல். பெரிய சதி நடந்திருப்பதாக சிபிஐ வாதிடுகிறது. ஆனால், அவர்கள் தாக்கல் செய்த காவல் கோரும் மனுவில் அது குறித்து ஏதுமில்லை என்றும் குறிப்பிட்டார்.
வழக்கு நாட்குறிப்பை ஏன் தாக்கல் செய்யவில்லை என்று நீதிபதி கேட்டார். வழக்கு நாட்குறிப்பின் அச்சிட்ட பிரதி கையிருப்பில் இல்லாததற்கு பிரிண்டர் பிரச்சினைதான் காரணம் என்றும் அதனால் தட்டச்சு செய்த பிரதி தாக்கல் செய்யப்படுகிறது என்றும் கூறியது சிபிஐ. இதற்கிடையே முன்ஜாமீனை மறுத்து டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. அமலாக்கப் பிரிவு கைது செய்வதற்கு உள்ள தடையும் தொடர்கிறது. இதே ஐ.என்.எக்ஸ் மீடியா தொடர்பாக அமலாக்கப் பிரிவு தொடர்ந்த வழக்கில் சிதம்பரத்தைக் கைது செய்வதற்கு உள்ள தடை இன்று வரை தொடரும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரும் மனுவை உச்சநீதிமன்றம் நாளையும் தொடர்ந்து விசாரிக்கும்.

