ஆறரை கிலோ தங்கத்துடன் சென்னை விமான நிலையத்தில் மலேசியர் கைது

ஆறரை கிலோ தங்கத்துடன் சென்னை விமான நிலையத்தில் மலேசியர் கைது

1 mins read
24fd69e1-a441-47ba-9112-544a1faaf1c0
பயணியின் பெட்டியில் 6.5 கிலோகிராம் எடையுள்ள 12 தங்கக் கட்டிகளைக் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து அவரைக் கைது செய்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

புதுடெல்லி: சென்னை விமான நிலையத்தில் 25 மில்லியன் ரூபாய் (1.47 மில்லியன் ரிங்கிட்) பெறுமானமுள்ள கடத்தல் தங்கத்துடன் மலேசிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

கடத்தல் தங்கம் பற்றி தகவலறிந்த இந்திய சுங்கத்துறை அதிகாரிகள், அந்த 41 வயது பயணியின் பெட்டியில் 6.5 கிலோகிராம் எடையுள்ள 12 தங்கக் கட்டிகளைக் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து அவரைக் கைது செய்தனர்.

விமான நிலையத்திற்கு வெளியில் அறிமுகமில்லாத ஒருவரிடம் அந்தத் தங்கத்தை ஒப்படைக்கவிருந்ததாக ஆகாய வேவுப்பிரிவு அதிகாரிகளிடம் மலேசிய பெண் தெரிவித்ததாகத் திங்கட்கிழமை வெளியிடப்பட்ட சுங்கத்துறை அறிக்கை தெரிவித்தது.

இச்சம்பவத்தின் தொடர்பில் உள்ளூர் அதிகாரிகள் புலனாய்வு செய்து வருவதாக சென்னையிலுள்ள மலேசியத் தூதர் கே.சரவணன் பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

இம்மாதத் தொடக்கத்தில், 1.34 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள வைரங்களை இந்தியாவுக்குள் கடத்திச்செல்ல முயன்ற மலேசிய ஆடவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

செய்தி: பெர்னாமா