போபால்: எதிர்க்கட்சிகள் சில பாஜக மீது தீய சக்திகளை ஏவி விட்டிருப்பதாக பாஜகவின் போபால் தொகுதி எம்பி பிரக்யா சிங் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர், சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி என ஓராண்டில் அடுத்தடுத்து பாஜக தலைவர்கள் உயிரிழந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
சாது ஒருவர் தம்மிடம் இவ்வாறு தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ள அவர், பாஜக கடுமையான காலத்தைச் சந்திக்க உள்ளதாக அந்தச் சாது கூறியதை தாம் மறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
"இன்று சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, பாபுலால் கவுர் யாதவ் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் அடுத்தடுத்து இறந்திருக்கிறார்கள். இதன் மூலம் அந்த சாது கூறியது உண்மைதான் எனத் தெரிகிறது," என்று பிரக்யா சிங் மேலும் கூறியுள்ளார்.
மகாத்மா காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவை தேச பக்தர் என பிரக்யா சிங் அண்மையில் தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சைக்கு வித்திட்டதுடன், பாஜக தலைமையும் அவரைக் கண்டித்தது.
இந்நிலையில் எதிர்க்கட்சிகள் மீது பிரக்யா சிங் இவ்வாறு குற்றம்சாட்டி இருப்பது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

