காஷ்மீர் விவகாரத்தை உச்ச நீதிமன்ற அமர்வு விசாரிக்கும்

காஷ்மீர் விவகாரத்தை உச்ச நீதிமன்ற அமர்வு விசாரிக்கும்

2 mins read

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு உரிமைகள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகளை வரும் அக்டோபர் மாதம் ஐந்து நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு விசாரிக்கும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370ன்கீழ் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு உரிமைகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இம்மாதம் 5ஆம் தேதி அறிவித்தார்.

அத்துடன், அம்மாநிலமும் ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.

இந்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு வரவேற்பும் எதிர்ப்பும் இருந்து வருகிறது.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு உரிமைகளை ரத்து செய்த மத்திய அரசின் முடிவை எதிர்த்து தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.எல்.சர்மா, ஓய்வுபெற்ற நீதிபதி ஹஸ்னைன் மசூதி, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஷா ஃபைஸல், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஷீலா ரஷீத் உட்பட பலரும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தன.

அப்போது, இது மிக முக்கியமான வழக்கு என்பதாலும் அரசின் நடவடிக்கைக்கு அரசியல் சட்ட அங்கீகாரம் உள்ளதா என்பதை உறுதி செய்வது அவசியம் என்பதாலும் இந்த வழக்குகள் அனைத்தையும் நீதிபதிகள் ஐவர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என திரு கோகோய் அறிவித்தார்.

அத்துடன், காஷ்மீருக்கான சிறப்புத் தகுதி ரத்து, அதைத் தொடர்ந்து அங்கு ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஆகியவற்றை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் அவர் உத்தரவிட்டார்.