மோடி அரசின் முடிவுக்கு ராகுல் ஆதரவு; பாகிஸ்தான் மீது சாடல்

மோடி அரசின் முடிவுக்கு ராகுல் ஆதரவு; பாகிஸ்தான் மீது சாடல்

2 mins read

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் நிலைப்பாட்டிற்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்திருப்பது இந்திய அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு உரிமைகளை பாஜக அரசு ரத்து செய்ததற்கும் அரசியல் தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்திருப்பதற்கும் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன.

மோடி அரசின் அதிரடி நடவடிக்கையைச் சற்றும் எதிர்பார்க்காத பாகிஸ்தான், சீனாவின் துணையுடன் இந்த விவகாரத்தை ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பாதுகாப்புச் சபைக்குக் கொண்டு சென்றது. அதேபோல, பிரான்ஸ் உள்ளிட்ட வேறு சில நாடுகளிடம் முறையிட்டும் அதற்குச் சாதகமாக எதுவும் நடக்கவில்லை.

இதனிடையே, 'காஷ்மீர் எங்களது உள்நாட்டு விவகாரம். இதில் மற்ற நாடுகள் தலையிட அனுமதிக்கமாட்டோம்' என இந்திய அரசு உறுதியாகக் கூறி வருகிறது.

பாஜக அரசின் இந்த நிலைப்பாட்டிற்குத்தான் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுபற்றி தமது டுவிட்டர் பக்கத்தில் கருத்துரைத்துள்ள அவர், "பல விவகாரங்களில் மத்திய அரசுடன் எனக்குக் கருத்து வேறுபாடு உண்டு. என்றாலும் ஒன்றை மட்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். காஷ்மீர் பிரச்சினை, இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இதில் பாகிஸ்தானோ, மற்ற நாடுகளோ தலையிட உரிமையில்லை. ஜம்மு-காஷ்மீரில் இடம்பெறும் வன்முறைக்கு பாகிஸ்தானின் தூண்டுதலே காரணம். அந்நாடு பயங்கரவாதத்தின் முதன்மையான ஆதரவாளரும்கூட," எனப் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, இந்திய விமானங்கள் தனது வான்வெளியில் பறக்க மீண்டும் தடை விதிப்போம் என பாகிஸ்தான் மிரட்டல் விடுத்துள்ளது. இதன் தொடர்பில் அந்த நாட்டின் பிரதமர் இம்ரான் கான் தமது அமைச்சரவையுடன் ஆலோசனை நடத்தியதாக அமைச்சர் ஃபவாத் ஹுசைன் சௌத்ரி தெரிவித்துள்ளார்.