இந்தியாவில் சாலை விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடும் நிலை யிலும் வழியில் செல்வோர் கண்டும் காணாமல் செல்வதாகவும் அக்கறையின்றி செல்ஃபி எடுப்பதாகவும் அவ்வப்போது ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன.
இத்தகைய சூழலில், மக்களிடையே மனிதாபிமானத்தையும் உதவி செய்யும் மனப்பான்மையையும் வளர்க்கும் நோக்கில் புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சாலை விபத்தில் சிக்கி அடிபட்டோரைக் காப்பாற்றி, மருத்துவமனையில் சேர்ப்போருக்கு சன்மானமாக ஐயாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
2019-2020ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்ட அறிக்கையை நேற்று புதுச்சேரி சட்டமன்றத்தில் தாக்கல் செய்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன், மக்கள் நெரிசல் அதிகமுள்ள சாலைகளிலும் குறுகிய சாலைகளிலும் விரைந்து சென்று உடனடி மருத்துவச் சிகிச்சை அளிக்க ஏதுவாக, அவசர மருத்துவ உதவிப் பயிற்சி பெற்றவர்களால் இயக்கப்படும் மோட்டார்சைக்கிள்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அந்த வாகனங்களில் 'ஜிபிஎஸ்' வசதி பொருத்தப்பட்டிருக்கும் என்றும் அவர் அறிவித்தார்.
ஆயுஷ் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டம் அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரும்.

