இந்தியா: பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஒரு கருவியாக கருதுகிறது

இந்தியா: பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஒரு கருவியாக கருதுகிறது

1 mins read

புதுடெல்லி: பாகிஸ்தான் என்றேனும் ஒரு நாள் இயல்பான அண்டை நாடாக மாறும் என இந்தியா நம்புகிறது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள அவர், தமக்குத் தெரிந்து எந்தவொரு உலக நாடும், தமது அண்டை நாடுகளுடன் தூதரக உறவைப் பேண தீவிரவாதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தியதில்லை என்று குறிப்பிட்டார்.

"பாகிஸ்தானுடன் பரஸ்பர வர்த்தகம் மேற்கொள்வதில் இந்தியா எப்போதுமே சிரமங்களை எதிர்கொண்டு வந்துள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானுடனான வர்த்தகத்தையும் தடுக்கிறது," என்றார் ஜெய்சங்கர்.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்புத் தகுதியை இந்திய அரசு அண்மையில் ரத்து செய்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து இருதரப்புக்கும் இடையே வார்த்தைப் போர் வெடித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவின் மீது யாராவது தாக்குதல் நடத்தினால், மறக்க முடியாத பதிலடி கொடுக்கப்படும் என இந்திய துணை அதிபர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானை மறைமுகமாக எச்சரிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு பேசியதாகக் கூறப்படுகிறது.

எந்த நாட்டின் உள் விவகாரங்களிலும் இந்தியா தலையிடுவது இல்லை என்று குறிப்பிட்ட அவர், இந்தியாவும் தங்கள் உள்நாட்டு விவகாரங்களில் மற்றவர்கள் தலையிடுவதை விரும்பவில்லை என்றார்.

"இந்தியா எந்த நாட்டின் மீதும் தாக்குதல் நடத்தாது. இந்தியா மீது வேறு நாடுகள் தாக்குதல் நடத்த முயன்றால், அவர்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அளவுக்கு தகுந்த பதிலடி தரப்படும். நமது அண்டை நாடு தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கிறது," என்றார் வெங்கையா நாயுடு.