பாதுகாப்பு வளையத்தில் குஜராத் துறைமுகங்கள்

பாதுகாப்பு வளையத்தில் குஜராத் துறைமுகங்கள்

1 mins read

அகமதாபாத்: பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற கமாண்டோ வீரர்கள் கடல் வழி குஜராத்தில் ஊடுருவி இருக்கலாம் என்று மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.

நீருக்கடியில் தாக்குதல் நடத்துவதற்கான பயிற்சி பெற்ற அந்த கமாண்டோ வீரர்கள் நாச வேலையில் ஈடுபட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து குஜராத்தின் கட்ச் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. மேலும் குஜராத்தில் உள்ள துறைமுகங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, குஜராத்தின் ஹராமி நலா பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த இரு படகுகள் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதாக எல்லைப் பாதுகாப்புப் படை தெரிவி்த்துள்ளது.

அப்படகுகளில் சந்தேகப்படும்படி எதுவும் காணப்படவில்லை என்றாலும், அவற்றில் வந்தவர்கள் என்னவாயினர் என்பது தெரியவில்லை.

இந்நிலையில் பாகிஸ்தான் கமாண்டோக்கள் ஊடுருவி இருப்பதால், அனைத்து துறைமுக முகவர்களும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும், துறைமுகத்தில் இருக்கும் கப்பல் அனைத்தும் பாதுகாப்பு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அதானி துறைமுகம் ஓர் அறிக்கை வழி கேட்டுக் கொண்டுள்ளது.

இதையடுத்து தாக்குதலுக்கு ஆளாக வாய்ப்புள்ளதாக கருதப்படும் குஜராத்தின் கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள வீடுகள், அலுவலகங்கள் அருகே போலிசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்பகுதிகளில் நுழைந்து, வெளியேறக் கூடிய வாகனங்களும் கண்காணிக்கப்படுகின்றன. கடலை ஒட்டிய பகுதிகளில் சுற்றுக்காவல் பணியும் தீவிரமடைந்துள்ளது.