இளையர்கள் இனவாத அரசியலுக்கு இரையாகி விடக்கூடாது என்கிறார் மம்தா

இளையர்கள் இனவாத அரசியலுக்கு இரையாகி விடக்கூடாது என்கிறார் மம்தா

1 mins read

கொல்கத்தா: பாஜகவின் இனவாத அரசியலுக்கு எந்த வகையிலும் அடிபணியப் போவதில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இளையர்கள் இனவாத அரசியலுக்கு இரையாகி விடக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொல்கத்தாவில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய அவர், இந்தியா தற்போது அதிபர் ஆட்சி முறையை நோக்கி சென்று கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

"இத்தகவலை படித்தவர்களுக்கும் மாணவர்களுக்கும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இனி இந்தியாவில் ஒரே தேர்தல், ஒரே தலைவர், ஒரே அரசியல் கட்சி, ஒரே நெருக்கடி நிலை என்ற நிலை வரும்.

"மேற்கு வங்கத்தைப் பிடித்துக் காட்டுவோம் என்று சொல்கிறார்கள். அது எப்படி நடக்கிறது என்பதையும் பார்த்துவிடுவோம்," என்று மம்தா பானர்ஜி ஆவேசத்துடன் தெரிவித்தார்.

பாஜக அரசு சில அரசியல் கட்சிகளைக் குறி வைப்பதற்காகவே சிபிஐ, அமலாக்கப்பிரிவு போன்ற விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்தி வருவதாக குறிப்பிட்ட அவர், தமது சகோதரரையும் விசாரணைக்கு அழைத்திருப்பதாகத் தெரிவித்தார்.

"நாளை என்னையும் அழைக்கலாம். நான் சிறைக்குச் செல்வதற்குத் தயாராகவே இருக்கிறேன். அடுத்த இரண்டாண்டுகளுக்கு உங்களின் ஆதரவு எனக்குத் தேவைப்படுகிறது.

"குதிரைப் பேரம் மூலம் கர்நாடகாவில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது.

"அடுத்ததாக அவர்களுடைய குறி மேற்கு வங்கம்தான். நாம் அவர்களை எதிர்த்துப் போராடுகிறோம். அதற்காகவே மேற்கு வங்கத்தைப் பிடிக்க அவர்கள் விரும்புகிறார்கள்," என்றார் முதல்வர் மம்தா.