கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் இந்தியாவில் வங்கி மோசடிகள் 74% அதிகரித்துவிட்டன என்றும் அவற்றின்மூலம் ரூ.71,543 கோடி வங்கிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
முந்தைய 2017-18 நிதியாண்டில் இந்த மோசடித் தொகை 41,167 கோடி ரூபாயாக இருந்தது. ரிசர்வ் வங்கியின் வருடாந்திர அறிக்கையில் இந்தப் புள்ளிவிவரங்கள் இடம்பெற்றுள்ளன.
ஒட்டுமொத்தத்தில், கடந்த நிதி ஆண்டில் 3,766 வங்கி மோசடிச் சம்பவங்கள் இடம்பெற்றன. முந்தைய ஆண்டைக் காட்டிலும் இது 15% அதிகம். மோசடிகள் மூலம் ஏற்பட்ட வருமான இழப்பும் கிட்டத்தட்ட 80% உயர்ந்துள்ளது.
மோசடி சம்பவங்களில் 55.4% பொதுத் துறை வங்கிகளிலேயே நிகழ்ந்தன என்றும் அதே நேரத்தில் மோசடி செய்யப்பட்ட தொகையில் 90% அவ்வங்கிகளுக்கு உரியவை என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஏமாற்று, ஆள்மாறாட்டம், முறைகேடு, நம்பிக்கை மோசடி ஆகியவை மூலமே அதிகமான தொகை மோசடி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
மோசடிகளைக் கண்டுபிடிக்க வங்கிகள் சராசரியாக ஈராண்டு காலம் எடுத்துக்கொண்டது குறித்து ரிசர்வ் வங்கி கவலை தெரிவித்து இருக்கிறது.
அதிலும் குறிப்பாக, ரூ.100 கோடிக்கும் அதிகமான தொகை தொடர்புடைய மோசடியைக் கண்டு பிடிக்க வங்கிகள் கிட்டத்தட்ட நாலரை ஆண்டுகள் எடுத்துக் கொண்டதாக ரிசர்வ் வங்கி கூறிஉள்ளது.
பெரிய அளவிலான மோசடிகள் மூலம் வங்கிகளுக்கு ரூ.52,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, கள்ள நோட்டுப் புழக்கமும் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை தெரிவித்துள்ளது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 500 ரூபாய், 2000 ரூபாய் நோட்டுகளிலும் கள்ள நோட்டுப் புழக்கம் அதிகரித்துள்ளது.
2017-18 நிதியாண்டைக் காட்டிலும் 2018-19 நிதியாண்டில் ஐநூறு ரூபாய் கள்ள நோட்டுப் புழக்கம் 121% அதிகரித்துவிட்டது என்றும் 2,000 ரூபாய் கள்ள நோட்டுப் புழக்கம் 21.9% கூடியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017-18 நிதியாண்டில் ஐநூறு ரூபாய் கள்ள நோட்டுகள் 9,892 பிடிபட்டன. கடந்த நிதி ஆண்டில் இந்த எண்ணிக்கை 21,865ஆக உயர்ந்தது.
அதேபோல, 2000 ரூபாய் நோட்டுகளில் 21,847 கள்ள நோட்டுகளும் 200 ரூபாய் நோட்டுகளில் 12,728 கள்ள நோட்டுகளும் புழக்கத்தில் இருந்தது தெரியவந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக, 2018-19 நிதி ஆண்டில் 317,384 கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன என்றும் அவற்றுள் அதிகபட்சமாக 221,218 நோட்டுகள் நூறு ரூபாய் மதிப்புடையவை என்றும் ரிசர்வ் வங்கியின் அறிக்கை தெரிவித்துள்ளது.
முந்தைய நிதியாண்டில் 522,783 கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருந்ததாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், கள்ள நோட்டு களையும் கறுப்புப் பணத்தையும் ஒழிப்பதற்காக புதிய 200, 500, 2000 ரூபாய் நோட்டுகளை அரசாங்கம் அறிமுகம் செய்தது. ஆனால், அதிலும் கள்ள நோட்டுகள் புழங்குவது அரசுக்குக் கவலையளித்துள்ளது.

