குடியுரிமை இல்லாததால் 19 லட்சம் பேர் தவிப்பு

குடியுரிமை இல்லாததால் 19 லட்சம் பேர் தவிப்பு

2 mins read

கவுகாத்தி: தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதிப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில் 19 லட்சம் பேர்களின் பெயர்கள் விடுபட்டிருப்பதால் அசாம் மாநிலத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து அங்கு போராட்டம் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அசாமில் பல ஆண்டுகளாக வசித்து வரும் லட்சக் கணக்கானோரின் பெயர்கள் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இல்லாததது அந்த மக்களுக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது.

அவர்கள் வங்க தேசத்தில் இருந்து வந்ததாகவும் அவர்கள் முறையான ஆவணங்கள் இன்றி பல ஆண்டுகளாக அங்கு வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து அவர்களை வெளியேற்ற வேண்டும் என அம்மாநிலத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில் அங்குள்ள வங்க தேசத்தவர்களை கண்டறிவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. இதற்காக தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட்டது. இதன் இறுதி வரைவுப் பட்டியல் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. அப்போது நாற்பது லட்சத்துக்கும் மேற்பட்டோரின் பெயர்கள் அப்பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பட்டியலில் தங்களின் பெயர்களை சேர்க்கக் கோரி மறுமதிப்பீட்டிற்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்தனர்.

அவற்றைப் பரிசீலித்த பின்னர், குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப் பட்டியல் நேற்று வெளியானது.

இதில் 3.11 கோடி பேர் இடம்பெற்றுள்ளனர். 19 லட்சத்துக்கும் மேலானோரின் பெயர்கள் இடம்பெறவில்லை. இதையடுத்து அசாமில் பதற்றமான சூழல் நிலவுவதாகவும், பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூர் போலிசாருடன் இணைந்து துணை ராணுவப்படையினரும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முறையான ஆவணங்கள் இல்லாதவர்கள் மட்டுமே பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

இந்நிலையில் அம் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஆனந்த் குமார் மாலோவின் பெயரும் நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியைத் தந்துள்ளது. இவர் அனைத்து இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணிக் கட்சியைச் சேர்ந்தவர்.