சென்னை: திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் காஷ்மீர் விவகாரத்தில் இரட்டை வேடம் போடுவதாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் தெரிவித்துள்ளார். 'ஒரே நாடு ஒரே சட்டம்' என்ற கொள்கையை பொதுமக்களிடம் பரப்புவதற்காக பாஜக நிர்வாகிகளுக்கு, 'தேசிய ஒற்றுமை இயக்கம்' என்ற பெயரில் சிறப்புப் பயிலரங்கம் இந்தியா முழுவதும் நடத்தப்பட உள்ளது.
பயிலரங்கத்தின் தொடக்கவிழா சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை நடந்தது. இதில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்த முரளிதர ராவ், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "காஷ்மீர் விவகாரத்தில் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் இரட்டை நிலைப்பாட்டுடன் செயல்படுகின்றன. தமிழகத்தில் பெண்களுக்காகவும் இட ஒதுக்கீட்டுக்காகவும் போராட்டம் நடத்தும் திமுக உள்ளிட்ட கட்சிகள் காஷ்மீரில் பெண்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கிடைக்கும் சலுகைகளை எதிர்க்கின்றன," என்றார்.
பின்னர் நடைபெற்ற தேசிய ஒற்றுமை இயக்க பயிலரங்கில் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, அந்தமான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 80 பாஜக பிரமுகர்கள் கலந்துகொண்டனர். தமிழகத்தின் சார்பில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர் எச்.ராஜா, இல.கணேசன் உட்பட பலர் பயிலரங்கத்தில் கலந்துகொண்டனர்.
இதற்கிடையே இந்த மாதமும் அடுத்த மாதமும் தமிழகத்தில் மோட்டார் சைக்கிள் பேரணி, பொதுக்கூட்டம், கருத்தரங்கம் ஆகியவற்றை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.
பாஜக அரசின் பொருளாதார கொள்கை, காஷ்மீர் விவகாரம், ரிசர்வ் வங்கி விவகாரம் உட்பட மத்திய அரசின் ஆறு திட்டங்கள் தொடர்பாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்கள் வைக்கின்றன.
இவற்றுக்குப் பதிலடி தரும் வகையில் இந்த நிகழ்ச்சிகளுக்கு பாஜக ஏற்பாடு செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

