மன்மோகன் சிங்: வரி தீவிரவாதத்தால் பாதிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் சிறிய, பெரிய வர்த்தகர்கள், தொழில் செய்வோர் அனைவரும் வரித் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

மிகப்பெரிய மனிதத் தவறுகளான பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் அவசரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பு ஆகியவற்றில் இருந்து இந்தியாவின் பொருளாதாரம் மீளவில்லை என்பது தெளிவாகத் தெரிவதாக அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

 

“கிராமப்புற இந்தியா மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களுக்கு போதுமான விலையைப் பெறவில்லை. கிராமப்புற வருவாய் குறைந்துவிட்டது. 

“மத்தியில் ஆளும் அரசில் தன்னாட்சி நிறுவனங்களின் சுயாட்சி மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. ரிசர்வ் வங்கி தனது இருப்பில் இருந்து மிகப்பெரிய அளவுக்கு ரூ.1.76 லட்சம் கோடியை அரசுக்கு வழங்க உள்ளது. பொருளாதாரச் சிக்கலைச் சமாளிக்க முடியாமல், திட்டமிடல் இல்லாமல் இருப்பது தெரிகிறது,” என மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் ஆழ்ந்த கவலையளிக்கும் நிலையில் இருப்பதாகச் சுட்டிக்காட்டி உள்ள அவர், வேகமான பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு இந்தியாவுக்கு தகுதியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

“அனைத்து வகையிலும் மோடி அரசின் தவறான, மோசமான நிர்வாகத்தால் இந்தப் பொருளாதார வளர்ச்சிக் குறைவு ஏற்பட்டுள்ளது. இந்த அரசு தவறுகளில் இருந்து மீளவில்லை.

“முதலீட்டாளர்களின் மனநிலையும் உற்சாகம் இழந்து காணப்படுகிறது. 

“பிரதமர் மோடி அரசின் கொள்கைகளின் விளைவால், வேலைவாய்ப்பு இல்லாத வளர்ச்சிதான் ஏற்பட்டுள்ளது,” என மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

ஆட்டோமொபைல் துறையில் 3.50 லட்சம் பேருக்கும் அதிகமானோர் வேலையிழந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அமைப்பு சாரா துறைகளிலும் மிகப்பெரிய அளவில் மக்கள் வேலையிழப்பைச் சந்தித்துள்ளதாகச் சுட்டிக்காட்டி உள்ளார்.

மத்திய அரசு பழிவாங்கும் அரசியலைத் தூர வைத்துவிட்டு, அனைத்து விவேகமுள்ளவர்களின் ஆலோசனையை ஏற்று, சிந்தித்து, நாட்டின் பொருளாதாரத்தை மனிதத் தவறுகளில் இருந்து மீட்க வேண்டும் எனவும் மன்மோகன் சிங் வலியுறுத்தி உள்ளார்.