அனைத்துலக கருத்தரங்கில் காஷ்மீர் குறித்து சொற்போர்

அனைத்துலக கருத்தரங்கில் காஷ்மீர் குறித்து சொற்போர்

1 mins read
99008ccd-dadc-4594-952f-115fe88fae39
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தின் ரத்தை எதிர்த்து பாகிஸ்தானில் போராட்டம் நடத்தப்படுகிறது. (படம்: இபிஏ) -

மாலத்தீவுகளில் நடைபெற்ற தெற்காசிய பேச்சாளர்களுக்கான உச்சநிலை மாநாட்டில் காஷ்மீர் விவகாரம் குறித்து பேச முயன்ற பாகிஸ்தானின் பேராளருக்கும் இந்திய பேராளருக்கும் இடையே விவாதம் மூண்டது. அரசாங்க ஆதரவிலான பயங்கரவாதத்தை பாகிஸ்தான் உடனே நிறுத்தவேண்டும் என்றும் இந்தியா கோரியுள்ளது.

தெற்காசிய நாடுகளின் பேராளர்கள் மாலத்தீவுகளின் நாடாளுமன்றத்தில் நேற்று கூடியிருந்தபோது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே இந்த விவாதம் ஏற்பட்டது. நிலையான மேம்பாட்டுக் குறிக்கோள்கள் பற்றிய கலந்துரையாடலின்போது பாகிஸ்தானின் துணை நாடாளுமன்ற நாயகர் கஸிம் சூரி காஷ்மீர் விவகாரத்தைப் பற்றி பேசத் தொடங்கினார். இது குறித்து இந்தியப் பேராளரான மக்களவையின் துணை நாயகர் ஹரிவன்ஷ் கேள்வி எழுப்ப முயன்றபோது திரு சூரி அவரைப் பேச விடாமல் தடுத்தார்.

இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தை பாகிஸ்தான் மாநாட்டில் எழுப்பியதை எதிர்ப்பதாகத் திரு ஹரிவன்ஷ் கூறினார். மேலும் பாகிஸ்தான் தனது எல்லைப்பகுதியில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான தேவை இருப்பதாக அவர் தெரிவித்தார்.

பல்லாண்டுகளாக நீடித்திருந்த ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை இந்திய நாடாளுமன்றம் ரத்து செய்ததை அடுத்து அந்நாட்டுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த விவகாரத்தை பாகிஸ்தான் பல்வேறு அனைத்துலக கருத்தரங்குகளில் எழுப்பியபோதும் அதனை இந்தியா ஏற்க மறுக்கிறது.