ஸ்ரீஹரிகோட்டா: நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் கடந்த ஜூலை 22ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.
பூமியின் சுற்றுவட்ட பாதையில் சுற்றி வந்து கொண்டிருந்த சந்திரயான்-2 விண்கலமானது, ஆகஸ்ட் 14 ஆம் தேதியன்று பூமியின் சுற்றுவட்ட பாதையிலிருந்து விலகி நிலவை நோக்கி பயணம் செய்தது.
கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று நிலைகளை கொண்ட இந்த விண்கலம் நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் நுழைந்து நிலவை சுற்றி வருகிறது.
அதன்பின் நிலவில் தரையிறங்குவதற்காக அதன் சுற்றுவட்ட பாதையின் உயரம் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதை 5வது மற்றும் இறுதி முறையாக மாற்றியமைக்கப்பட்டது.
இதையடுத்து சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டரிலிருந்து லேண்டர் 'விக்ரம்' வெற்றிகரமாக பிரிந்துள்ளது.
இந்த லேண்டர் கருவி நிலவின் சுற்றுப்பகுதியின் 100 கி.மீ தொலைவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் செப்டம்பர் 7ஆம் தேதி லேண்டர் நிலவின் தென்பகுதியில் தரையிறங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. பின்னர் லேண்டரில் உள்ள ரோவர் நிலவில் ஆய்வுகளை மேற்கொள்ளும்.

