சிதம்பரத்தின் காவல் நீட்டிப்பு; சிதம்பரத்தைக் கையாண்ட விதம் குறித்து மம்தா கவலை

சிதம்பரத்தின் காவல் நீட்டிப்பு; சிதம்பரத்தைக் கையாண்ட விதம் குறித்து மம்தா கவலை

2 mins read
68dd5080-3d83-4cca-8fc2-870aeecf0371
ப.சிதம்பரத்தை கைது செய்ய புலனாய்வு அமைப்புகள் கையாண்ட விதம் மிகவும் வருத்தமளிக்கிறது என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கடுமையாக விமர்சித்துள்ளார். -

புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதான மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை மேலும் 3 நாட்கள் காவலில் வைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க உச்ச நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட சிலர் மீது சிபிஐயும் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த வழக்கின் தொடர்பில் சிபிஐ தரப்பினர் இன்னும் விசா ரணை நடத்த உள்ளதால் சிபிஐ காவலை மேலும் 5 நாள் நீட்டிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலை செப்டம்பர் 2ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் சிதம்பரத்தை பிணையில் விடுதலை செய்யக்கோரி அவரது வழக்கறிஞர் கபில் சிபல் உச்ச நீதிமன்றத்தில் நேற்று வாதாடினார்.

"சிதம்பத்தின் விசாரணை காவலை இனியும் நீட்டிக்க கூடாது. அப்படியே விசாரணை காவலை நீட்டித்தாலும் அவருக்கு தற்போது 74 வயதாவதால் திகார் சிறையில் அடைக்குமாறு உத்தரவிடக் கூடாது. வீட்டுக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி தரவேண்டும்," என கபில் சிபல் வாதாடினார்.

இதுகுறித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அணுகி முறையிடுமாறு அறிவுறுத்திய உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 5 வரை மேலும் 3 நாட்கள் ப.சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டது.

நேற்று பிற்பகல் ப.சிதம்பரத்தை மீண்டும் சிபிஐ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த இருந்த நிலையில் அந்த நீதிமன்றம் பிைண அளிக்க மறுத்துவிட்டால் அவரை திகார் சிறைக்கு அனுப்பக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ப.சிதம்பரத்தை கைது செய்ய புலனாய்வு அமைப்புகள் கையாண்ட விதம் மிகவும் வருத்தமளிக்கிறது என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கடுமையாக விமர்சித்துள்ளார்.