புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையி லிருந்து நேற்று எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். புதுச்சேரி சட்டசபையில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பாக நேற்று அதிமுக பிரச்சினை எழுப்பியது. பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அதிமுக எம்எல்ஏ அன்பழகன், தனது உரையை முடித்த பின்னர், சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதற்குப் பதிலளித்த சபாநாயகர் சிவக்கொழுந்து, "எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மான கடிதம் முறையாக இல்லாததால் அதை திருப்பி அனுப்பிவிட்டோம்," என்றார். அதன் பின்னர் பேசிய என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயபால், மற்ற எதிர்க்கட்சிகள் கொடுத்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வீர்களா? என்று கேட்டார்.
அதற்கும் சபாநாயகர் சாதகமான பதிலை அளிக்கவில்லை. சட்டமன்ற விதிகளின்படி பரிசீலனை செய்யப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றார். சபாநாயகரின் இந்த பதிலால் அதிருப்தி அடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபை நடவடிக்கைகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

