வங்கிகள் இணைப்பு; சுவாமி எதிர்ப்பு

வங்கிகள் இணைப்பு; சுவாமி எதிர்ப்பு

2 mins read

மதுரை: மத்திய அரசின் வங்கிகள் இணைப்புக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு, நாடு முழுவதும் 27 பொதுத்துறை வங்கிகள் இருந்த நிலையில் பல வங்கிகளை இணைத்து இனிமேல் 12 வங்கிகளாகச் செயல்படும் என்ற அறிவிப்பை நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

இதையடுத்து கடும் விமர் சனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் வங்கிகள் இணைப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய சு. சுவாமி, நாட்டின் பொருளாதாரம் சரியாக இல்லாத நிலையில் வங்கிகள் இணைப்பை நடை முறைப்படுத்தி இருக்கக் கூடாது. கொஞ்சம் அவசரப்பட்டு விட்டார்கள் என்று தோன்றுவதாகக் கூறினார்.

"ஏனெனில் வங்கிகள் இணைப்பு அத்தனை எளிதான காரியம் அல்ல. எல்லா வங்கிகளுக்கும் கிளைகள் இருக்கின்றன.

"ஒரே சாலையில் பேங்க் ஆஃப் பரோ டாவும் இருக்கும். விஜயா வங்கியும் இருக்கும். வங்கிகளை மூடும்போது இதையெல்லாம் யோசிக்க வேண்டும். குறிப்பாக பொருளாதாரச் சூழல் சரியில்லாதபோது இதைச் செய்திருக்கக் கூடாது.

"அவ்வாறு செயல்படுத்தினால் பெரிய பிரச்சினைகள் ஏற்படும். அருண் ஜெட்லி நிதி அமைச்சராக இருந்தபோது சிறப்பாகச் செயல் படாததன் விளைவை நாடு தற் போது மொத்தமாக எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

"முன்னாள் நிதியமைச்சர் சிதம் பரம் மீது 8 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அதனால் அவர் 20 வருடம் சிறை செல்வது உறுதி," என்று சுப்பிரமணியன் சுவாமி சொன்னார்.