சென்னை: தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவரான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானாவின் சகோதரியாகச் செயல்படுவேன் என்று கூறியுள்ளார்.
தெலுங்கானா பவன் அலுவலக ஆணையரான வேதாந்தம் கிரி நேற்று முன்தினம் சென்னை சாலிகிராமத்தில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து தெலுங்கானா ஆளுநர் பதவிக்கான அதிகாரபூர்வ ஆணையை வழங்கினார்.
இதையடுத்து டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசினார்.
"ஒரு தேசிய கட்சியின் அங்கத்தினராக இருந்த நான் இன்று ஒரு ஆளுநராகச் செல்கிறேன் என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. தமிழகத்துக்கும் தெலுங்கானாவுக்கும் பாலமாக இந்த தமிழ் மகள் செயல்படுவாள்.
"எனக்கு இந்த பதவியை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கும் தேசிய தலைவர் அமித் ஷாவுக்கும் செயல் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத தெரிவித்துக் கொள்கிறேன்.
"தற்போது நான் தமிழ் மக்களின் பிரதிநிதியாகவும் தெலுங்கு மக்களின் சகோதரியாகவும் செல்கிறேன். எல்லாவற்றிலும் வெற்றி பெற்றுதான் பழக்கம். எனவே தெலுங்கானா ஆளுநராகவும் சிறப்பாகச் செயல்படுவேன்," என்று டாக்டர் தமிழிசை கூறினார்.

