புதிய துணை சபாநாயகர்

புதிய துணை சபாநாயகர்

1 mins read

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை துணை சபாநாயகராக காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ பாலன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி மாநில சட்டசபை சபாநாயகராக பதவி வகித்த வைத்திலிங்கம், மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டதால் தன் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, துணை சபாநாயகராக இருந்த சிவக்கொழுந்து கடந்த ஜூன் 3ஆம் தேதி சபாநாயகராக பதவியேற்றார். இந்த நிலையில் புதுச்சேரி சட்டசபையில் நேற்று முன்தினம் கேள்வி நேரம் முடிந்தவுடன் துணை சபாநாயகர் தேர்தல் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெறும் என சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.

இதையடுத்து துணை சபாநாயகர் பதவிக்குப் போட்டியிடுவதற்காக ஆளும் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ பாலன், புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழக வாரியத் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.

இதற்கிடையே துணை சபாநாயகர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் நேற்று மதியம் 12 மணியுடன் நிறைவடைந்தது. ஆனால் எம்எல்ஏ பாலனை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி துணை சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.