மாஸ்கோ: பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு மேற்கொண்டுள்ள அதிகாரபூர்வ பயணத்தின் போது வர்த்தகம், முதலீடு, தொழில்துறை, ராணுவம், பாதுகாப்பு, தொழில்நுட்பம், கல்வி, கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பாக முக்கிய ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.
அங்குள்ள விளாடிவோஸ்டக் நகருக்கு பிரதமர் மோடி வருகை புரிந்ததை மிகப்பெரிய கவுரவமாகக் கருதுவதாக ரஷ்ய அதிபர் தெரிவித்தார். இந்நிலையில் விளாடிவோஸ்தக் நகரில் இருந்து சென்னைக்கு நேரடிக் கப்பல் போக்குவரத்து விரைவில் துவங்கும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
விளாடிவோஸ்டக் நகரில் கிழக்கு பொருளாதாரக் கூட்டமைப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். நேற்று அதிகாலை ரஷ்யா சென்றடைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமது அழைப்பை ஏற்று, மாநாட்டில் பங்கேற்றதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாக அதிபர் புட்டின் தெரிவித்தார்.
இதையடுத்து இருதரப்புக்கும் இடையிலான அதிகாரபூர்வ பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இந்தியா, ரஷ்யா இடையேயான விவகாரங்கள் மட்டுமன்றி, அனைத்துலக நிலவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன் பின்னர் ஜேஸ்டா கப்பல் கட்டும் துறைமுகத்தை அதிபர் புட்டினுடன் சென்று பிரதமர் மோடி பார்வையிட்டார். இதையடுத்தே ரஷ்யா, சென்னை இடையேயான நேரடிக் கப்பல் போக்குவரத்து குறித்து அவர் அறிவித்தார்.
"இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நல்லுறவு இருநாடுகளின் தலைநகரங்களுக்கு மட்டும் இடையிலான உறவல்ல. "இந்த நல்லுறவில் இருநாடுகளைச் சேர்ந்த அனைத்து மக்களும் இணைக்கப்பட்டுள்ளனர்," என்றார் மோடி.
இதற்கிடையே இரண்டாம் உலகப் போரில் பெற்ற வெற்றியைக் கொண்டாடும் வகையில் ரஷ்யாவில் ஆண்டுதோறும் நடைபெறும் 'வெற்றி நாள்' கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க வேண்டும் என ரஷ்ய அதிபர் கேட்டுக் கொண்டதாக ஊடகச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

