தீப்பிடித்துத் தரைமட்டமான பட்டாசு ஆலையில் 'முறைகேடுகள்'

தீப்பிடித்துத் தரைமட்டமான பட்டாசு ஆலையில் 'முறைகேடுகள்'

1 mins read
b56b3405-47d5-455c-a8eb-b355e38505e7
-

பஞ்சாப் மாநிலத்திலுள்ள பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பில் குறைந்தது 22 பேர் உயிரிழந்ததை அடுத்து அந்த ஆலை இதுநாள்வரை சட்டவிரோதமான முறையில் செயல்பட்டதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

சம்பவத்தில் மேலும் 15 பேர் காயமடைந்ததாக மாநில அதிகாரிகள் கூறுகின்றனர்.

பட்டாலா என்ற ஊரிலுள்ள அந்தத் தொழிற்சாலைக் கட்டடத்தில் புதன்கிழமை கிட்டத்தட்ட 4 மணிக்கு வெடிப்பு ஏற்பட்டது. அந்தக் கட்டடம் இடிந்து தரைமட்டமானது மட்டுமல்லாமல் வெடிப்பின் அதிர்வால் சுற்றியுள்ள கட்டடங்களும் சேதமடைந்தன.

தொழிற்சாலைக் கட்டடத்தின் இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கி இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்தத் தொழிற்சாலை பல்லாண்டுகளாகவே சட்டவிரோதமான முறையில் செயல்பட்டு வருவதாக அங்கு வசித்தவர்கள் புகார் செய்தனர்.

சீக்கிய சமயத்தை ஸ்தாபித்த குரு நானக்கின் பிறந்த நாளைக் கொண்டாடும் ஊர்வலத்திற்காக அந்த ஆலை கடந்த சில காலமாகப் பட்டாசுகளைத் தயாரித்துக்கொண்டிருந்தது.

"இந்த ஆலையைப் பற்றி உள்ளூர் நிர்வாகத்தினரிடம் நாங்கள் ஏழு எட்டு முறை புகார் செய்திருக்கிறோம். ஆனால் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை," என்று உள்ளூர்வாசி ஒருவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இதே வட்டாரத்தில் இதுபோன்ற ஒரு வெடிப்பு 2017ஆம் ஆண்டில் ஏற்பட்டதாக அவர் கூறுகிறார். அந்தச் சம்பவத்தில் ஒருவர் மாண்டதாகவும் மூவர் காயமடைந்ததாகவும் அவர் கூறினார்.