ரஷ்யாவின் தூரக்கிழக்குப் பகுதியில் நடைபெறும் கிழக்கத்திய பொருளியல் கருத்தரங்கின்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மதும் தனிப்பட்ட முறையில் சந்தித்துள்ளனர்.
இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் எப்படி பன்முகப்படுத்துவது என்பது குறித்து இரு பிரதமர்களும் கலந்துரையாடியதாக இந்தியாவின் பிரதமர் அலுவலகம் டுவிட்டரில் தெரிவித்தது. "மலேசியா இந்தியாவின் முக்கியமான ஆசியான் பங்காளி" என்றும் அந்தப் பதிவு குறிப்பிட்டது.
விளாடிவொஸ்டோக் நகரில் நடந்த அந்தச் சந்திப்பின்போது "இருநாட்டு உறவிலுள்ள பல்வேறு அடுக்குகளின் மீது கவனம் செலுத்தப்பட்டது," என்று வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமார் டுவிட்டரில் தெரிவித்தார்.
நேற்று ரஷ்யாவை அடைந்த திரு மோடி, 20ஆவது முறையாக நடைபெற்ற இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சநிலைக்கூட்டத்திலும் பொருளியல் கருத்தரங்கிலும் கலந்துகொண்டார்.
இரு தலைவர்களுக்கும் இடையே நிகழ்ந்த கலந்துரையாடலில், இந்தியாவிலிருந்து மலேசியாவிற்குத் தப்பியோடிய சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாகிர் நாயக் பற்றியும் பேசப்பட்டதாக இந்தியாவின் வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் இருநாட்டுத் தலைவர்களுக்குமே முக்கியமானது என்று திரு கோகலேயின் டுவிட்டர் பதிவு குறிப்பிட்டது. மலேசியா அவரை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புமா இல்லையா என்பது குறித்து இரு நாட்டு அதிகாரிகள் மேலும் கலந்துரையாடுவர் என்றும் கூறப்படுகிறது.
காஷ்மீர் விவகாரம் குறித்தும் இருநாட்டுத் தலைவர்கள் கலந்துரையாடினர். காஷ்மீருக்குச் செய்யப்படும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் பின்னணியிலுள்ள நியாயங்களைத் திரு மோடி டாக்டர் மகாதீரிடம் விளக்கியதாகக் கூறப்படுகிறது.
"பயங்கரவாதம் அனைத்துலகப் பிரச்சினை என்பதை ஒப்புக்கொண்ட டாக்டர் மகாதீர், தனது நாடு எந்தவித பயங்கரவாதத்திற்கும் எதிரானது என்று தெரிவித்தார்," என்றார் திரு கோகலே.

