சண்டிகர்: பஞ்சாப் குர்தாஸ்பூர் வெடிமருந்து ஆலையில் பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 23 பேர் பலியாகி உள்ளனர்.
பஞ்சாப் குர்தாஸ்பூர் பகுதியில் பாட்டாலா என்னும் இடத்தில் தமிழகத்தின் சிவகாசியை போல எராளமான வெடிமருந்து ஆலைகள் உள்ளன.
ஹன்சாலிபல் என்னுமிடத்திற்கு அருகே பாட்டாலா-ஜலந்தர் ரோட்டில் நேற்று பிற்பகல் 3.45 மணிக்கு வெடிப்பு நிகழ்ந்தது. அப்போது அந்த ஆலைக்கு முன்புள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இரண்டு பேரும் மாண்டதாக காவல்துறை துணைத் தலைவர் எஸ்பிஎஸ் பார்மர் கூறினார்.
வெடிமருந்து உற்பத்தியின் போது ஏற்பட்ட தவறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் உண்மையான காரணம் என்னவென்று அறிய போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஏராளமான வெடி மருந்துகள் அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அவற்றால் மேலும் தீ பெரிய அளவில் பரவியிருக்கலாம் என்றும் போலிஸ் தரப்பில் கூறப்பட்டது. தீ பரவிய சில நிமிடத்தில் அந்த ஆலைக் கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
இந்த ஆலையில் விபத்து ஏற்பட்ட நேரத்தில் 75க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்துக் கொண்டு இருந்தனர்.
இந்த நிலையில் இந்த விபத்தில் 23 பேர் பலியாகி உள்ளனர். கட்டடம் இடிந்து விழுந்ததால், 50க்கும் அதிகமானோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டு உள்ளனர். அங்கு தீ விபத்து ஏற்பட்டு, கட்டடமும் விழுந்துள்ளதால் மீட்புப் பணியை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கட்டட இடிபாடுகளில் சிக்கித் தவிப்பவர்களை மீட்பது சிரமமாகி உள்ளது.
மீட்புப் பணிகளில் தாமதம் ஆவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
வெடிப்புச் சத்தம் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பாலும் கேட்டதாகக் கூறப்படுகிறது. சம்பவம் நடந்த இடத்திற்கு சற்று அருகேயிருந்த கடை, வீடுகளின் சன்னல் கண்ணாடிகள் உடைந்ததாகக் கூறப்படுகிறது.
அத்துடன் அருகேயிருந்த பள்ளி உள்ளிட்ட கட்டடங்கள் மோசமாக சேதமடைந்துள்ளன. நல்லவேளையாக அருகேயுள்ள பள்ளியின் வகுப்புகள் முடிந்து பிள்ளைகள் அனைவரும் பள்ளியை விட்டு வெளியேறி அரை மணி நேரம் கழித்து இந்த வெடிப்புச் சம்பவம் நடந்ததால் பள்ளிப் பிள்ளைகள் இந்த விபத்தில் சிக்குவது தவிர்க்கப்பட்டது.
இதுவரை மிக மோசமான காயங்களுடன் 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் தீயணைப்புப் படையினரும் தீவிரமாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

