திருவனந்தபுரம்: கேரளாவில் ஜூன் மாதத் தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. கேரளா முழுவதும் மழை தொடர்ச்சியாகப் பெய்துவரும் நிலையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு அம்மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு, கொல்லம், ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி ஆகிய 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஜூன் மாதம் விட்டு விட்டு பெய்த மழை ஜூலை மாத இறுதியில் கன மழை கொட்டித் தீர்த்தது ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் மழையின் தீவிரம் அதிகரித்தது. இதனால் கேரளாவின் மலப்புரம், வயநாடு மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. ஏராளமான வீடுகள், பயிர் நிலங்கள் சேதமடைந்தன. மரங்களும் மின்கம்பங்களும் முறிந்து விழுந்தன. வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் ஆயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். கடந்த மாத நடுவில் மழையின் தீவிரம் சற்று குறைந்தது. இதனால் நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. சேதமடைந்த சாலைகளும் குடியிருப்புப் பகுதிகளும் சீரமைக்கப்பட்டன. வீடுகளைச் சூழ்ந்த வெள்ளம் வடியத் தொடங்கியதால் மக்கள் நிவாரண முகாம்களில் இருந்து வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கேரளாவில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. குறிப்பாக மலையோரக் கிராமங்களிலும் கடற்கரை பகுதிகளிலும் கன மழை பெய்தது. அதோடு சூறைக்காற்றும் வீசியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு நிவாரணப் பணிகளிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் மீண்டும் கனமழை
2 mins read

