சிதம்பரத்துக்கு சிறை; சிபிஐ அதிரடி உத்தரவு

சிதம்பரத்துக்கு சிறை; சிபிஐ அதிரடி உத்தரவு

2 mins read
afdb1221-2287-4764-819a-b18c656381c6
-

புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை நீதிமன்றக் காவலில் அடைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது. அந்த வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட சிதம்பரத்தை செப்டம்பர் 19ம் தேதி வரை திகார் சிறையில் தனியறையில் வைக்க சிபிஐ நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஐஎன்எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை மொத்தம் 15 நாள் காவலில் எடுத்து சிபிஐ விசாரித்தது. அந்த விசாரணைக் காவல் முடிந்ததை அடுத்து நேற்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் முன்னிலையானார். இந்த வழக்கில் 6-வது முறை யாக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அவர் முன்னிலையானார்.

திகார் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்க வேண்டாம் என்று சிதம்பரம் தரப்பில் மிகவும் தாழ்மையுடன் கோரிக்கை முன்வைக்கப்பட்டும் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இந்த உத்தரவை அடுத்து சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து திகார் சிறைக்குச் சிதம்பரத்தைக் கொண்டு செல்வதற்கான வாகனங்கள் உடனே தயாராயின.

முன்னதாக, ஐஎன்எக்ஸ் வழக்கில் அமலாக்கத் துறைக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சிபிஐக்கு எதிராக சிதம்பரம் தரப்பில் முன்பிணை மேல்முறையீட்டு மனு திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, முன்னதாக ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றம் முன்பிணை வழங்கி நீதிபதி ஓ பி ஷைனி உத்தரவிட்டார்.

ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் விசாரணைக்கு ப.சிதம்பரமும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரமும் ஒத்துழைக்கவேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இருவரும் தலா ரூ.1 லட்சம் பிணைத்தொகை செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டது. முன் அனுமதி பெறாமல் வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால் ஐஎன்எக்ஸ் வழக்கில் சிதம்பரம் சிறைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.