ஜம்மு: ஜம்மு காஷ்மீர், டெல்லி உள்ளிட்ட இடங்களில் உள்ள புனிதத் தலங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம் போட்டுள்ளதாக இந்திய உளவுத் துறை எச்சரித்துள்ளது. இதனை அடுத்து ஜம்மு காஷ்மீர் எல்லைக்கு அருகே உள்ள புனிதத் தலங்கள் உள்ளிட்ட பல இடங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
காஷ்மீர் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ சுமார் 10,000 பயங்கர வாதிகளுக்குப் பாகிஸ்தான் பயிற்சி அளித்து வருவதாகவும் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்காக அது 200 வீரர்களை எல்லையில் தயார் நிலையில் வைத்துள்ளதாகவும் இந்திய தரப்பில் கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டை ஒரு பக்கம் கிளப்பிவிட்டு இந்தியப் படையினரின் கவனத்தைத் திசைதிருப்பி, மறுபக்கம் வழியாக பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்வது பாகிஸ்தான் ராணுவத்தின் வழக்கம் என்று குறிப்பிட்டுள்ள இந்தியா, அது அதே வழியை இப்போதும் பின்பற்றும் சாத்தியம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இதற்கான புதிய பயங்கரவாத முகாம்கள் எல்லை அருகே தோன்றி உள்ளதாகவும் இந்தியா தெரிவிக்கிறது.
"கைபர், பாக், துங்க்வா மாகாணம் வழியாக பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி புனித வழிபாட்டுத் தலங்களின் மீது தாக்குதல் தொடர தயார் நிலையில் உள்ளனர்.
"இந்தியாவில் மதக்கலவரத்தைத் தூண்டிவிடவும் பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
"ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லைஅருகே இயங்கும் 18 பயங்கரவாத முகாம்களை இந்திய வீரர்கள் அடையாளம் கண்டுள்ளனர்," என்றும் இந்திய தகவல்கள் கூறின.
இதையடுத்து ஜம்மு காஷ்மீர் எல்லைக்கு அருகே உள்ள புனிதத் தலங்களுக்கும் இதர பல இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

