பாஜகவுக்குள் பூசல்

பாஜகவுக்குள் பூசல்

2 mins read

சென்னை: பாஜகவின் முன்னாள் மத்திய இணை அமைச்சர் சி.பி.ராதாகிருஷ்ணன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை 'தங்களை வீழ்த்திய வெற்றித்தளபதி' என்று புகழாரம் சூட்டியுள்ள நிலையில், மற்றொரு தலைவரான எச்.ராஜாவோ ப.சிதம்பரத்தைப் போலவே ஸ்டாலினும் விரைவில் சிறை செல்வது உறுதி என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாஜ கட்சித் தலைமை சி.பி. ராதாகிருஷ்ணனிடம் இதுதொடர்பாக விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழக பாஜக தலைவர் பதவிக்கான போட்டிக் களத்தில் பலரும் குதித்திருக்கும் சூழலில், அதிலிருந்து சி.பி.ராதாகிருஷ்ணனை ஓரங்கட்டுவதற்கான பணிகளை ஒரு குழு கணகச்சிதமாக செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அதிமுக-பாஜக கூட்டணிக்குள் ராதாகிருஷ்ணன் இருந்துகொண்டு திமுகவைப் புகழ்ந்து பேசியுள்ளது குறித்து டெல்லி தலைமைக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளதாம்.

இதனால் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் டெல்லியில் இருந்து விரைவில் விளக்கம் கேட்கவோ அல்லது விசாரணை நடத்தவோ கூடும் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, "எங்கள் அண்ணன் சி.பி.ராதாகிருஷ்ணன் எப்போதுமே அரசியல் நாகரிகத்தை பின்பற்றுபவர். எதிர்த்தரப்பு கட்சியினரையும் அன்பாலும் பண்பாலும் கவரக்கூடியவர். யதார்த்தமாக அவர் பேசியதை இங்குள்ள சிலர் திரித்துப் பேசி வருகின்றனர்.

"கட்சிக்கு இவர் செய்த பணிகள் தலைமைக்குத் தெரியும், அப்படியிருக்க தமிழக பாஜகவிற்கு நேற்று வந்தவர்களுக்கு எல்லாம் அண்ணனைப் பற்றி ஒன்றும் தெரிவதற்கு வாய்ப்பில்லை," என்று சி.பி.ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து தமிழக பாஜக தலைவர்கள் தெரிவிக்கும் கருத்துகளில் நிறைய முரண்பாடு நிலவி வருகிறது. இதனால் தமிழக பாஜகவில் பூசல் நிலவி வருகிறது.

தமிழக பாஜக தலைவராக தமிழிசை சௌந்தரராஜன் இருந்த வரை அவர் மற்ற கட்சித் தலைவர்களுடன் நெருக்கமாகவே இருந்தார்.

முக்கியமாக திமுகவை தமிழிசை விமர்சனம் செய்தாலும் மோசமாக தாக்கியது கிடையாது. இதனால்தான் தமிழிசை தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட போதுகூட ஸ்டாலின் முதல் ஆளாக வாழ்த்து கூறினார்.

ஆனால் ஸ்டாலினை தமிழக பாஜக இனியும் இதே கோணத்தில் அணுகுமா என்று தெரியவில்லை.

ஸ்டாலினால் தற்போது தமிழக பாஜகவிற்குள்ளேயே புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பாஜகவின் இரு முக்கிய தலைவர்கள் ஸ்டாலின் குறித்து இப்படி வெவ்வேறு நிலைப்பாட்டுடன் கருத்து கூறியிருப்பது பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

பாஜகவின் பெரிய போட்டி தற்போது காங்கிரஸ் அல்ல, திமுகதான். அதனால் ஸ்டாலினை கடுமையாக எதிர்த்தால் தனக்கு தலைவர் பதவி கிடைக்கும் என்று எச்.ராஜா நினைப்பதாக பேசிக்கொள்கிறார்கள். இன்னொரு பக்கம் டெல்லி வரை எதிரொலித்த பேச்சால் விசாரணை வளையத்தில் சி.பி.ராதாகிருஷ்ணன் சிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.