நிலவை எட்டும் பயணத்தில் பின்னடைவு

நிலவை எட்டும் பயணத்தில் பின்னடைவு

1 mins read
6070130a-235f-479c-acc3-ee545f39ada3
-

சந்திரயான்-2 விண்கலத்தின் 'லேண்டர் விக்ரம்' திட்டமிட்டபடி நேற்று அதிகாலை நிலவின் தென் துருவத்தில் தரையிறங்காத நிலையில், கண்ணீர்விட்டு அழுத இஸ்ரோ தலைவர் கே.சிவனை அரவணைத்து ஆறுதல் கூறினார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.

பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் உரையாற்றிவிட்டு புறப்படும்போது பிரதமர் மோடியிடம் திரு சிவன் கண்ணீர்விட்டு அழுதார். உடனே திரு சிவனை தன் தோள் மீது சாய்த்து ஆரத்தழுவித் தேற்றினார் திரு மோடி.

அதற்கு முன்னதாக விஞ்ஞானிகள் மத்தியில் உரையாற்றிய திரு மோடி, "சந்திரயான்-2 திட்டத்துக்காக தூக்கமின்றி பல நாட்கள் நமது விஞ்ஞானிகள் உழைத்துள்ளனர். அவர்களின் உழைப்பு ஈடு இணையற்றது. இரவு பகலாக உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளால் இந்தியா பெருமை கொள்கிறது. நமது விண்வெளி திட்டத்தில் வெற்றிக்கான புதிய உச்சங்களை நாம் அடையவுள்ளோம்," எனக் கூறி அவர்களை உற்சாகப்படுத்தினார்.

பிரதமர் மோடியின் ஊக்க உரையைக் கேட்ட விஞ்ஞானிகள் சிலர் உணர்ச்சிப் பெருக்கால் கண்ணீர்விட்டு அழுதனர்.

அவர் தொடர்ந்து, "அதிவிரைவில் புதிய விடியல் மற்றும் சிறந்த நாள் நமக்கு வரும். அறிவியலில் தோல்வி என்பதே கிடையாது. அதில் பரிசோதனைகள் மற்றும் முயற்சிகளே உள்ளன," என்று பேசினார்.