இந்தியாவின் விண்வெளி பயணத்தைக் கேலி செய்யும் ‘ஹேஷ்டேக்’

இந்திய விண்வெளி ஆய்வு நிலையம் (இஸ்ரோ) நூலிழையில் வரலாறு படைக்கத் தவறியதால் அந்நாட்டில் பலரும் வருத்தத்தில் உள்ளனர். இஸ்ரோவின் தலைவர் அழுவதையும் அவருக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தட்டிக்கொடுத்ததையும் காட்டும் காணொளிகளும் படங்களும் பலரை நெகிழ வைத்துள்ளன.

இந்தியாவின் துணிச்சலை மற்ற உலக நாடுகள் பாராட்டும் நேரத்தில் பாகிஸ்தானில் சிலரோ, இந்தியாவை ஏளனப்படுத்தும் விதமாக பல்வேறு வாசகங்களைச் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.

#IndiaFailed என்ற  ‘ஹேஷ்டேக்’ சொல்லைப் பயன்படுத்தி அவர்கள் இந்திய விண்வெளி விஞ்ஞானிகளை மட்டம்தட்டியுள்ளனர். இதில் பாகிஸ்தானின் அறிவியல், தொழில்நுட்ப அமைச்சர் ஃபவத் செளதரியும் ஒருவர்.

திரு  செளதரியின் டுவிட்டர் பதிவுகளுக்கு எதிராக இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் குரல் எழுப்பியுள்ளனர். இந்தியாவின் முயற்சி சாதாரணமானது அல்ல என்றும் அவரது கேலிச் சொற்கள் ஓர் அமைச்சருக்குத் தகாதவை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.