ராம் ஜெத்மலானி காலமானார்

1 mins read
f96416ae-aef1-4f59-bb23-386910d704f6
-

புதுடெல்லி: பிரபல இந்திய வழக்கறிஞர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய சட்ட அமைச்சருமான ராம் ஜெத்மலானி நேற்று காலமானார். இவருக்கு வயது 95.

கடந்த சில மாதங்களாகவே உடல்நலம் குன்றியிருந்த நிலையில், நேற்றுக் காலை 7.45 மணியளவில் இவரது உயிர் பிரிந்தது.

ஆறு முறை மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த இவர், வாஜ்பாய் பிரதமராக இருந்த போது மத்திய அமைச்சராகவும் இருந்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பாஜகவில் இருந்து பிரிந்த இவர், 2004 பொதுத் தேர்தலில் வாஜ்பாயை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

அதிக ஊதியம் வாங்கும் வழக்கறிஞர்களில் ஒருவராக இருந்த இவர், அத்வானி, லாலு பிரசாத் யாதவ், ஜெயலலிதா, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட முக்கிய அரசியல்வாதிகளின் சார்பில் முன்னிலையாகி வாதாடியுள்ளார்.

இவரது மறைவுக்கு அதிபர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர். உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். நேற்று மாலையில் திரு ஜெத்மலானியின் நல்லுடல் தகனம் செய்யப்பட்டது.