மந்தநிலையை நோக்கி பொருளியல்; விழித்துக் கொள்ளாத அரசு: பிரியங்கா கடும் விமர்சனம்

புதுடெல்லி: மந்தநிலையை நோக்கி இந்தியப் பொருளியல் சென்றுகொண்டிருப்பதாகக் கூறிய காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி, அரசு விழித்துக்கொள்வது எப்போது என்று கேட்டுள்ளார். இதுகுறித்த தமது டுவிட்டர் பதிவில், “மில்லியன்கணக்கான இந்தியர்களின் தலைக்கு மேல், அவர்களது வாழ்வாதாரத்தின் மேல் கத்தி தொங்குகிறது. தானியங்கி வாகனத் துறை கடுமையாக வீழ்ச்சி கண்டிருப்பது உற்பத்தி, போக்குவரத்துத் துறையில் வளர்ச்சி சரிந்திருப்பதையும் சந்தையில் நம்பகத்தன்மை குறைந்து வருவதையும் காட்டுகிறது,” என்று பிரியங்கா கூறியுள்ளார். அத்துடன், சென்னையில் உள்ள மாருதி, அசோக் லேலண்ட் ஆகிய வாகன நிறுவனங்களின் ஆலைகள் கடந்த ஐந்து நாட்களாக மூடப்பட்டிருப்பது தொடர்பான செய்தி அறிக்கையையும் தமது பதிவுடன் அவர் இணைத்துள்ளார்.

கடந்த ஏழாண்டுகளில் இல்லாத அளவில், இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் இந்தியப் பொருளியல் வளர்ச்சி ஐந்து விழுக்காட்டிற்கும் கீழே இறங்கியது. உற்பத்தி, வேளாண் துறைகளில் ஏற்பட்ட பெரும் சரிவே இதற்குக் காரணம் என புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சு அறிக்கை மூலம் தெரிவித்திருந்தது. இதையடுத்து, பொருளியல் சரிவை மீட்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை  என்று பிரியங்கா சாடியுள்ளார்.

முன்னதாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் நாட்டின் பொருளியல் வளர்ச்சி சரிவு தொடர்பில் மத்திய அரசை எச்சரித்திருந்தார். நாட்டின் நலனைக் கருத்தில்கொண்டு அவரது அறிவுரைகளைப் பரிசீலிக்க வேண்டும் என்று கூட்டணிக் கட்சியான சிவசேனையும் பாஜகவை வலியுறுத்தியிருந்தது.