சுடச் சுடச் செய்திகள்

சிக்குகிறார் கமல் நாத்

புதுடெல்லி: மத்திய பிரதேச முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான கமல் நாத்தை (படம்) கைது செய்வதற்கான ஏற்பாடு நடைபெற்று வருவதாக காங்கிரஸ் கட்சி அதிர்ச்சியில் உறைந்துள்ளது. ஏற்கெனவே ப.சிதம்பரம், டி.கே.சிவகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் கமல் நாத்துக்கும் வலை விரிக்கப்பட்டுள்ளது. 

1984ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த பெரும் கலவரத்தில் கமல்நாத்துக்கும் பங்கிருப்பதாக அப்போதிருந்தே குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. கலவரம் தொடர்பாக மொத்தம் ஏழு வழக்குகள் இருந்த நிலையில் மூன்று வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்பட்டு நான்கு வழக்குகள் போதுமான சாட்சிகள் இல்லை எனக்கூறி மூடப்பட்டு விட்டன. இருந்தாலும் சீக்கிய அமைப்புகள் இவ்விவகாரத்தை தொடர்ந்து கிளப்பியபடியே இருந்தன. 

இதையடுத்து மூடப்பட்ட நான்கு வழக்குகளை மீண்டும் விசாரிக்க இரு தினங்களுக்கு முன் மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்தது. 

தற்போது கமல் நாத்துக்கு எதிராக புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகக் கூறி சிறப்புப் புலனாய்வுக்குழு விசாரிக்கத் தயாராகிவிட்டது. 

‘டெல்லி குருத்வாரா ரகாப்கஞ்ச் எதிரே நடந்த வன்முறையின்போது கமல்நாத் இருந்தார்; வன்முறையை அவர்தான் முன்னின்று நடத்தினார்; அவர் முன்பாக இரண்டு கொலைகள் நடந்தன’ என சாட்சி சொல்வதற்கு ரகாப்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த இருவர் முன்வந்துள்ளனர்.

ஏற்கெனவே விசாரணை ஆணையத்தில் முன்னிலையான கமல் நாத், தான் அந்த இடத்தில் இருந்ததை ஒப்புக்கொண்டாலும் அனைவரையும் அமைதிப்படுத்தும் பணியை மட்டுமே செய்ததாக கூறியிருந்தார். இந்த ஒப்புதல்தான் அவருக்கு எதிராக திரும்பும் என தெரிகிறது. கமல் நாத்துக்கு சிறப்பு புலனாய்வுக் குழு ஓரிரு நாளில் அழைப்பாணை அனுப்பி விசாரிக்கும் என்றும் அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon