லடாக்கில் இந்திய-சீன மோதல் தணிந்தது

இந்தியாவின் லடாக் மாநிலத்தில் அந்நாட்டின் ராணுவப் படையினருக்கும் சீனத் துருப்பினருக்கும் இடையிலான மோதல் பேச்சுவார்த்தைகளால் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

லடாக்கின் பங்கோங் ஏரியின் வடக்குக் கரையில் இந்தியத் துருப்புகள் சுற்றுக்காவலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது சீனத்துருப்புகள் திடீரென அவர்களை இடைமறித்துத் தாக்கியதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன. திபெத் முதல் லடாக் வரை விரிகின்ற அந்த ஏரியின் மூன்றில் இரண்டு பங்கு சீனாவுக்குச் சொந்தமானது.

இரு தரப்பினருக்கும் இடையே புதன்கிழமை (செப்டம்பர் 11ஆம் தேதி) காலை தொடங்கிய மோதல் மாலை வரை நீடித்தது.

“தூதரக அதிகாரிகளுக்கு இடையே நிகழ்ந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த மோதலின் தீவிரம் குறைந்துள்ளது,” என்று இந்திய ராணுவம் தெரிவித்தது.

இந்தியத் துருப்பினரும் சீனத் துருப்பினரும் மோதிக்கொண்டதைக் காட்டும் காணொளி இணையத்தில் தற்போது பரவி வருகிறது.