மனுவை மீட்டுக் கொண்ட ப.சிதம்பரம்; உதவியாளரிடம் விசாரணை

புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குப் பிறகு முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வரும் 19ஆம்  தேதி வரை திகார் சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஐஎன்எக்ஸ் முறைகேடு தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் பிணை கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். 

மேலும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்தும் தனியாக மற்றொரு மனுவை அவர் தாக்கல் செய்திருந்தார்.

இந்த இரு மனுக்களும் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரரின் மனுக்களுக்கு பதில் அளிக்கும்படி சிபிஐக்கு கடிதம் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

அடுத்தகட்ட விசாரணைக்கு வழக்கை நீதிபதிகள் செப்டம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்த    னர். இந்த நிலையில் செப்டம்பர் 19ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை ப.சிதம்பரம் மீட்டுக் கொண்டார்.

மற்றொரு நிலவரத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது அவரிடம் கூடுதல் தனிச் செயலாளராக பணிபுரிந்த டெல்லியைச் சேர்ந்த கே.வி.கே.பெருமாளிடமும் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதற்காக நேற்று பிற்பகல் விசாரணைக்காக டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் முன்னிலையாகுமாறு கே.வி.கே.பெருமாளுக்கு அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. ஆனால் இது அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப் படவில்லை.