இந்தியா: இணையத் தாக்குதல்களில் சென்னைக்கு முதலிடம்

இந்தியாவிலேயே சென்னைவாசிகள்தான் ஆக அதிகமாக இணையத் தாக்குதலுக்கு உள்ளாவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில், இணையத்தைப் பயன்படுத்தும் இந்தியர்களில் மூவரில் ஒருவர் இணையத் தாக்குதலால் பாதிக்கப்பட்டனர் என்று ‘கே7 கம்ப்யூட்டிங்’ நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்மூலம் தெரியவந்துள்ளது.

சென்னையை மையமாகக் கொண்ட இந்நிறுவனம் ‘இணைய அச்சுறுத்தல் கண்காணிப்பு’ எனும் தலைப்பில் தனது ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

அதில், 2019 ஏப்ரல்-ஜூன் வரையிலான காலகட்டத்தில் சென்னையில்தான் ஆக அதிகமாக 48% இணையத் தாக்குதல்கள் இடம்பெற்றன எனக் கூறப்பட்டுள்ளது.

மெட்ரோ நகரங்களைப் பொறுத்தவரை, 41 விழுக்காட்டுடன் கோல்கத்தா இரண்டாம் இடத்திலும் 28 விழுக்காட்டுடன் டெல்லி கடைசி இடத்திலும் உள்ளன.

வேலை நாட்களில், அதிலும் குறிப்பாக வெள்ளிக்கிழமையில்தான் மெட்ரோ நகரங்களில் இணையத் தாக்குதல் அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

மாலை 4 மணியளவிலேயே இணையத் தாக்குதல் அதிகளவில் இடம்பெறுகின்றன என்றும் அதிகாலை 6 மணியே பாதுகாப்பான நேரமாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

மெட்ரோ நகரங்கள், முதல்நிலை நகரங்களை ஒப்புநோக்க, இரண்டாம் நிலை நகரங்களில் இணையத் தாக்குதல் பிரச்சினை இன்னும் மோசமாக இருக்கிறது என்று அந்த அறிக்கை கூறுகிறது.

ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் பீகார் மாநிலத் தலைநகரான பாட்னாவில் 48%, அசாம் தலைநகர் கௌஹாத்தியில் 46%, உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவில் 45% இணையத் தாக்குதல்கள் இடம்பெற்றன. அதே நேரத்தில், கேரளத் தலைநகரான திருவனந்தபுரம் 35 விழுக்காட்டுடன் பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது.

தவறாகக் கையாளப்படும் சேவையகங்கள் மூலமாகவே அதிகமான இணையத் தாக்குதல்கள் இடம்பெறுகின்றன.

“ஒரு கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ள சாதனங்களில் ஏதேனும் ஒன்று பாதுகாப்பின்றி இருந்தாலும் அது அந்தக் கட்டமைப்பில் இருக்கும் மற்ற சாதனங்களும் இணையத் தாக்குதலுக்குள்ளாக வழிவகுத்து விடும்,” என்றார் ‘கே7 கம்யூட்டிங்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கே.புருஷோத்தமன்.

ஏழு மில்லியன் சாதனங்கள் வழியே நடந்த இணையக் குற்றங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, ஆராயப்பட்டன.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சின்மயானந்துக்கு எதிராக ஆதாரம் வேண்டும் என்பதால் அவரது மூக்குக் கண்ணாடியிலேயே கேமரா பொருத்தி, அவரது நடவடிக்கைகளைக் காணொளியாகப் பதிவு செய்ததாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார். கைதான சின்மயானந்தை 14 நாட்கள் சிறையில் அடைக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

21 Sep 2019

பாலியல் புகாரில் முன்னாள் அமைச்சருமான பாஜக மூத்த தலைவருமான சுவாமி சின்மயானந்த்

நடிகர் விஜய். படம்: ஊடகம்

21 Sep 2019

நடிகர் விஜயின் பேச்சுக்கு வரவேற்பு