கனிமொழி திடீர் இலங்கை பயணம்

கொழும்பு: திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இலங்கை சென்றுள்ளார். ராமநாதபுரம் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி அவருடன் சென்றுள்ளார்.

தமிழக மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக தலைநகர் கொழும்புவில் இலங்கை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் இவ்விருவரும் ஆலோசனை நடத்தினர். இலங்கை மீன்வள, நீர்வள மேம்பாட்டு துணை அமைச்சர் திலிப் வேடராச்சி இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

இந்தியா-இலங்கை மீனவர்

களுக்கு இடையே ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் ஆண்டு இறுதியில் சிறப்பு மாநாடு நடத்த திட்டமிடப்பட்டது. 

இரு நாடுகளுக்கும் இடையே பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கான தீர்மானம் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்படும் என்று பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர். 

தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கை மீனவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்படுவது தொடர்பாக கனிமொழி இக்கூட்டத்தில் கவலை தெரிவித்ததாக செய்திகள் கூறின. இலங்கைக் கடற்பகுதிக்குள் தமிழக மீனவர்கள் அத்துமீறி நுழைவதாக இலங்கை சார்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்தியா-இலங்கை இடையில் இதுதொடர்பாக பலதரப்புப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும் தமிழக மீனவர் பிரச்சினை இன்றுவரை தொடர்கிறது. எல்லை மீறி இலங்கைக்குள் நுழையும் மீனவர்கள் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கில் கைது செய்யப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்குடன் கனிமொழியின் பேச்சுவார்த்தை இடம்பெற்றதாகக் கூறப்பட்டபோதிலும் திடீரென கனிமொழி இலங்கை சென்றது குறித்து ஊடகங்கள் வினா எழுப்பி வருகின்றன.