வங்கிகள் இணைப்பு: ஊழியர்கள் மிரட்டல்

புதுடெல்லி: இந்தியாவில் வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர் சங்கங்கள் செப்டம்பர் 25 நள்ளிரவு முதல் 27ம் தேதி வரை அடையாள வேலை நிறுத்தப்போராட்டம் நடத்தப்போவதாக  அறிவித்துள்ளன.  

அதேபோல, நவம்பர் மாதம் 2வது வாரத்தில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.   

ஸ்டேட் பேங்க், பாங்க் ஆப் பரோடா ஆகிய வங்கிகளுடன் சில பொதுத்துறை வங்கிகள் ஏற்கெனவே இணைக்கப்பட்டன. இந்நிலையில், 10 பொதுத்துறை வங்கிகளை இணைத்து நான்கு பெரிய வங்கிகளாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

பொதுத்துறை வங்கிகளை நிதி அடிப்படையில் வலுப்படுத்தும் நோக்கில் 10 வங்கிகளை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் நாட்டின் பொதுத்துறை வங்கிகளின் மொத்த எண்ணிக்கை 12 ஆகக் குறையும்.

இதற்கு வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதன் தொடர்பில் கருத்து தெரிவித்த இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் தீபல் குமார் சர்மா, செப்டம்பர் மாதம் தாங்கள் இரண்டு நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தார்.  

இந்திய தேசிய வங்கி அதிகாரிகள் பேரவை, அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், தேசிய வங்கி அதிகாரிகள் அமைப்பு ஆகியவையும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்கப்போவதாக அறிவித்து உள்ளன. 

வாரத்தில் 5 நாட்கள் வேலை, பண பரிவர்த்தனைச் சேவை நேரத்தைக் குறைத்து வேலை நேரத்தை ஒழுங்குமுறைப் படுத்துதல், வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 

கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அனைத்தும் இணைந்து, வரும் நவம்பர் 2வது வாரத்தில் இருந்து நடக்க இருக்கும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் தனியார் வங்கி அதிகாரிகளும் பங்கேற்க இருப்பதாகவும் சங்கங்கள் தெரிவித்தன,

இதனால், 20,000 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட பண பரிவர்த்தனைச் சேவைகள் பாதிக்கப்படும் என்றும் ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. 

வங்கிகள் இணைப்பை எதிர்த்து செப்டம்பர் 1ல் அதிகாரிகள் நீங்கலாக வங்கி ஊழியர்கள் மட்டும் போராட்டம் நடத்தினர்.