‘இந்தியப் பொருளியல் வளர்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு இல்லை’

புதுடெல்லி:  இந்தியாவின் பொருளியல் மோசம் என்ற நிலையில் இருந்து மிகமோசம் என்ற நிலைக்கு  இறங்குவதாக முன்னாள் பிரதமரும் பொருளியல் வல்லுநருமான மன்மொகன் சிங் அபாயச் சங்கு ஊதி இருக்கும் நிலையில், பொருளியல் வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிக பலவீனமாக இருக்கிறது என்று அனைத்துலக பண நிதியம் அறிவித்துள்ளது. 

ஊடகங்களிடம் பேசிய நிதியத்தின் பேச்சாளர் கேர்ரி ரைஸ்,  இந்தியா மற்றும் அதன் வளர்ச்சி விகிதம் தொடர்பில் கேள்வி எழுந்துள்ளதாகத் தெரிவித்தார். விரைவில் புள்ளிவிவரங்கள் வெளியிடப்படவுள்ள நிலையில்,  இந்தியாவின் அண்மைய பொருளியல் வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்டஅளவுக்கு இல்லை என்று அவர் தெரிவித்தார். 

இப்போதைய நிதியாண்டின்  முதல் காலாண்டில் அதாவது ஏப்ரல் முதல் ஜூன் வரை வளர்ச்சி ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்து 5% ஆக இருந்ததாக புள்ளிவிவரங்கள் அண்மையில் தெரிவித்தன. 

கடந்த 7 ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்த அளவுக்குப் பெரும் சரிவு இப்போதுதான் முதல் முறையாக ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் முன்னாள் பிரதமரும் பொருளியல் நிபுணர் என்று உலக அளவில் மதிக்கப்படுபவருமான மன்மோகன் சிங், பொருளியல் மோசம் என்ற நிலையில் இருந்து மிகவும் மோசம் என்ற நிலைக்குச் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தார். 

காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைமை அலுவலகத்தில் ஒரு கூட்டத்தில் பங்கேற்ற அவர், 2024ல் இந்தியப் பொருளியலை $5 டிரிலியன் மதிப்புக்கு உயர்த்தவேண்டும் என்ற மத்திய அரசின் இலக்கு வெறும் கனவாகிவிடும் என்றார்.