புதுடெல்லி: இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (செப்டம்பர், 14) புதுடெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது நாட்டின் பொருளியல் மீண்டு வருவதற்கான அறிகுறி தென்படுவதாகக் கூறினார். தற்போதைய பொருளாதார சூழல், வளர்ச்சியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் குறித்தும் நேற்று அவர் விளக்கினார்.
"நாட்டின் பணவீக்கம் தற்போது கட்டுக்குள் உள்ளது. தொழில்துறையில் உற்பத்தி அதிகரித்து பொருளாதாரம் மீண்டு வருவதற்கான அறிகுறிகள் பிரகாசமாக தென்படுகின்றன.
"வங்கிகள் கடன் வழங்குவதை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
"மத்திய ரிசர்வ் வங்கியின் வட்டிக் குறைப்பு பலனை நுகர்வோருக்கு வழங்க வங்கிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
"உற்பத்திக்கு புத்துயிர் அளிப்பது தொடர்பாக வரும் 19ஆம் தேதி பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளேன்.
"ஏற்றுமதியை ஊக்குவிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
"ஏற்றுமதிப் பொருட்கள் மீதான கட்டணங்களை நீக்க புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதித் துறையை ஊக்குவிக்கும் வகையில் துபாயில் தற்போது நடப்பதைப்போல, 2020ஆம் ஆண்டு இந்தியாவில் பெரிய விற்பனை விழா நடத்தப்படும். உற்பத்தித் துறையில் ஏற்பட்டுள்ள சிறிய சறுக்கலைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
"தொழில் நடைமுறைகளை எளிதாக்க நடவடிக்கை எடுக்கப்படும். தொழில்துறைக்கு அதிக கடன்களை வழங்க பொதுத்துறை வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
"வரிவிதிப்பு முறையில் சில சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட உள்ளன. குறைந்த அளவு வரி செலுத்துவோர் செய்யும் சிறு தவறுகளுக்காகத் தண்டிக்கப்படமாட்டார்கள்," என்று அவர் கூறினார்.

