தேசிய வளர்ச்சி பரிந்துரைக்குழு: ஆந்திராவின் பொருளியல் கவலையளிக்கிறது

தேசிய வளர்ச்சி பரிந்துரைக்குழு: ஆந்திராவின் பொருளியல் கவலையளிக்கிறது

2 mins read
b8a01074-102c-41de-8ffe-1e16a83df685
-

ஆந்திராவின் பொருளாதார நிலைமை மிகவும் கவலையளிக்கும் விதமாக உள்ளதாக தேசிய வளர்ச்சி பரிந்துரைக்குழு (நிதி ஆயோக்) துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். ஆந்திராவுக்கு நேற்று முன்தினம் சென்ற திரு ராஜீவ், அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் சில அமைச்சர்களுடன் உயர் மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டார். அமராவதியில் நடந்த இந்தக் கூட்டத்தில் ஆந்திராவின் பொருளாதார நிலை பற்றி திரு ராஜீவ் இவ்வாறு கூறியுள்ளார்.

"ஆந்திராவின் வருவாய் பற்றாக்குறை கவலையளிப்பதாக உள்ளது. இங்கு திட்டமிடப்படாத செலவுகள் அதிகரித்துள்ளன. எனவே, ஆந்திராவில் உணவு பதப்படுத்தும் தொழில், விவசாயம் போன்றவை தவிர பிற துறைகளில் முதலீடு செய்வதில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும். இது தொடர்பாக ஆந்திர அரசுடன் சேர்ந்து பணியாற்ற நிதி ஆயோக் தயாராக உள்ளது," என அவர் கூறியுள்ளார்.

ஆந்திராவின் முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பொறுப்பேற்ற பிறகு அம்மாநில மக்களுக்காக பல்வேறு புதிய திட்டங்களைக் கொண்டுவந்தார். விவசாயிகள், தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோருக்கு ஊக்கத் தொகை, வீடு தேடி வரும் ரேஷன் பொருள்கள், பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு எனப் பல திட்டங்களைக் கொண்டுவந்தார்.

குழந்தைகளுக்கான சுகாதாரம், கல்வி உள்கட்டமைப்பு, சத்தான உணவு ஆகியவற்றை மேம்படுத்த பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாகக் கூறிய திரு ஜெகன், மாநிலத்தில் கல்வியின்மையைக் குறைக்க பல திட்டங்களைச் செயல்படுத்துவதாகச் சொன்னார்.

மாநிலத்தின் வரவுசெலவுத் திட்டத்தை மாற்றவில்லை என்ற அவர், "மாநில முன்னுரிமைகளை மாற்றியுள்ளோம். கல்வி, மருத்துவம் போன்றவற்றின் வளர்ச்சியே எங்கள் முன்னுரிமை," என்று கூறினார். மாநில வருவாய், மத்திய அதிகாரப் பகிர்வு, நிதிப் பற்றாக்குறை ஆகியவற்றை அதிகரிக்கவோ மாற்றவோ முடியாத நிலையில், மத்திய மானியம் கூடுதலாகக் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் திரு ஜெகன் கூறியுள்ளார்.