புதுடெல்லி: சொந்தத் தாயால் கடத்தல்காரனிடம் விற்கப்பட்ட 15 வயது சிறுமி அதிர்ஷ்டவசமாகத் தப்பித்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அந்தச் சிறுமியின் ஒரு வயது தம்பியை அவளது தாயார் கடந்த மாதம் இதே போல விற்றதாக அவள் கூறினாள்.
கடந்த வாரம் உறவினரின் வீட்டுக்குத் தன்னுடன் வருமாறு அந்தத் தாயார் தனது மகளைக் கட்டாயப்படுத்தினார். ஆனால் அந்த உறவினரின் வீட்டுக்குப் பதிலாக அவர் அந்தச் சிறுமியை டெல்லியிலுள்ள நிஜாமுடின் பகுதியிலுள்ள ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். அங்கு அந்தத் தாயார், தான் வேறு இடத்திற்குச் செல்லவேண்டும் என்று சிறுமியிடம் தெரிவித்தார். ஆடவர் ஒருவர் பிற்பாடு அவளை வீட்டுக்கு அழைத்துச்செல்வார் என்றும் அந்தப் பெண் கூறினார். சற்று நேரத்திற்குப் பிறகு, அந்தத் தாயார் சொன்னபடி ஆடவர் ஒருவர் சிறுமி இருந்த ஹோட்டலுக்கு வந்திருந்தார். ஆனால் அவர் அந்தச் சிறுமியை அவளது சொந்த வீட்டுக்குக் கொண்டு போகாமல் வேறோர் இடத்திற்கு அழைத்துச் சென்றார்.
அங்கிருந்தவர்கள் சிறுமிக்கு மணப்பெண் அலங்காரங்களைச் செய்யத் தொடங்கினர். அதிர்ச்சியடைந்த அந்தச் சிறுமியிடம், "உன் தாயார் உன்னை ஒரு லட்சத்திற்கு விற்றுவிட்டார்," என்று அவர்கள் தெரிவித்தனர். ஒருவழியாக அந்தச் சிறுதி சாதுர்யமாகத் தப்பித்து, தனது சொந்த ஊரிலுள்ள போலிஸ் நிலையத்திற்குச் சென்று நடந்ததை எடுத்துரைத்தாள்.
அளவுக்கு அதிகமான கடன்சுமையால் சிறுமியின் தாயார் தனது இரண்டு பிள்ளைகளையும் விற்றதாகத் தெரியவந்துள்ளது. அந்தப் பிள்ளைகள் தங்களது சொந்தத் தந்தையுடன் வாழாமல் தாயாருடனும் மாற்றான் தந்தையுடனும் வாழ்ந்து வந்ததாக ஊடகங்கள் கூறுகின்றன.சம்பவம் குறித்து போலிசார் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளனர். இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. அந்தச் சிறுமி தற்போது பராமரிப்பு இல்லம் ஒன்றுக்கு அனுப்பப்பட்டிருக்கிறாள்.

