சென்னை: வங்கிப் பணியிடங்களுக்கான தேர்வு ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டும் நடக்கும் என்ற அறிவிப்பில் மாற்றம் செய்யவேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குத் திமுக மகளிர் அணிச் செயலர் கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். வங்கித் தேர்வுகளைத் தமிழில் நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உறுதி செய்யும் வகையில், கிராமப்புற வங்கி வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு, ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி தவிர 13 பிராந்திய மொழிகளில் கேள்வித் தாள்கள் வழங்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தெரிவித்திருந்த நிலையில் அதற்கு மாறாக வங்கி பணியாளர் தேர்வாணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டது.
இந்த நிலையில் பொதுத் துறை வங்கிகளுக்கான தேர்வைத் தமிழிலும் நடத்த வேண்டும் என்று திமுக எம்.பி.கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் காலியாக உள்ள வங்கி பணியிடங்களுக்குத் தேர்வு ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டும் நடக்கும் என்ற அறிவிப்பு மாநில மொழிகளுக்கு இழைக்கப்படும் அநீதி. இதை உடனடியாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் சரி செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

