முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கைது: உச்ச நீதிமன்றத்தை அணுகிய வைகோ

முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கைது: உச்ச நீதிமன்றத்தை அணுகிய வைகோ

2 mins read
6362112f-4351-4aae-87bb-3a8f895b9fb2
கோப்புப்படம்: இந்திய ஊடகம் -

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா தேசிய பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அவர் ஏற்கெனவே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் மீது பொது பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு அண்மையில் ரத்து செய்தது. இதையடுத்து அங்கு அவ்வப்போது போராட்டங்கள் தலைதூக்கி வருகின்றன.

இந்நிலையில் அம்மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள் பலர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

பரூக் அப்துல்லா குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும் வெளியிடப்படாததை அடுத்து அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வலியுறுத்தி மதிமுக பொதுச் செயலர் வைகோ உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.

இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள், பரூக் அப்துல்லா எங்கு இருக்கிறார் என்பது குறித்து மத்திய அரசு வரும் 30ஆம் தேதிக்குள் விவரம் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், திங்கட்கிழமை இரவே பரூக் அப்துல்லா பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது வீடு துணைச் சிறைச்சாலையாக அறிவிக்கப்பட்டு, அவர் அங்கேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

எனினும் அவர் தனது உறவினர்களையும் நண்பர்களையும் சந்திக்க தடை ஏதும் விதிக்கப்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களை விசாரணை ஏதுமின்றி இரண்டு ஆண்டுகள் வரை சிறையில் வைத்திருக்க முடியும்.

இத்தகைய கடுமையான சட்டத்தின் கீழ் பரூக் அப்துல்லாவை கைது செய்ய வேண்டியதன் அவசியம் என்ன என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளன.

இதற்கிடையே, பரூக் அப்துல்லாவை உரிய நேரத்தில் ஸ்ரீநகரில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்று சந்திப்பேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

"காஷ்மீர் ஒரு சிறைக்கூடம் ஆக்கப்பட்டு விட்டது. காஷ்மீர் மக்கள் முதலில் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கவேண்டும். அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் நசுக்கப்பட்டு விட்டன," என்று வைகோ தெரிவித்துள்ளார்.