ஐநா: புலம்பெயர்ந்தோரில் இந்தியர்களே அதிகம் 

 

வெளிநாடுகளுக்கு இவ்வாண்டு புலம்பெயர்ந்தோரில் ஆக அதிகமானோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இந்தியாவிலிருந்து மட்டும் 17.5 மில்லியன் மக்கள் புலம்பெயர்ந்ததாக ஐக்கிய நாட்டு நிறுவனம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. உலகெங்கிலும் புலம்பெயர்ந்தோரின் மொத்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 272 மில்லியனை எட்டியிருக்கிறது. 

ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பொருளியல், சமூக விவகாரத் துறையின் மக்கள்தொகைப் பிரிவு இன்று (செப்டம்பர் 18) வெளியிட்ட 2019ஆம் ஆண்டுக்கான அனைத்துலக புலம்பெயர்ந்தோர் புள்ளிவிவரங்களில், வயது, பாலினம், குடியுரிமை உள்ளிட்ட விவரங்களுடன் உத்தேசக் கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. 

மக்கள்தொகைக் கணக்கெடுப்புகள், மக்கள்தொகைப் பதிவேடுகள் அல்லது தேசிய பிரதிநித்துவ ஆய்வுகள் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட அதிகாரத்துவ தேசிய புள்ளிவிவரங்களின் அடிப்படையில் கணிப்புகள் செய்யப்பட்டுள்ளன. 

வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்வோரில் மூன்றில் ஒரு பகுதியினர் பத்து நாடுகளைச் சேர்ந்தவர்கள் என அறிக்கை தெரிவித்தது. 

மெக்சிகோ இரண்டாவது இடத்திலும் (11.8 மில்லியன் மக்கள்), சீனா மூன்றாவது இடத்திலும் (10.7 மில்லியன் மக்கள்) உள்ளன. 

அடுத்தடுத்த நிலைகளில் ரஷ்யா (10.5 மில்லியன் மக்கள்), சிரியா (8.2 மில்லியன் மக்கள்), பங்ளாதேஷ் (7.8 மில்லியன் மக்கள்), பாகிஸ்தான் (6.3 மில்லியன் மக்கள்), உக்ரேன் (5.9 மில்லியன் மக்கள்), பிலிப்பீன்ஸ் (5.4 மில்லியன் மக்கள்), ஆப்கானிஸ்தான் (5.1 மில்லியன் மக்கள்) உள்ளன. 

இந்தியாவுக்கு 2019ல் 5.1 மில்லியன் வெளிநாட்டு மக்கள் புலம்பெயர்ந்து சென்றனர். இது 2015ஆம் ஆண்டின் 5.2 மில்லியனைவிடக் குறைவு. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் வெளிநாட்டுக் குடியேறிகளின் விகிதம் 2010 முதல் 2019 வரை 0.4 விழுக்காடாக நிலையாக இருந்தது.