சிந்துவை மணக்க விரும்பும் மலைச்சாமி

உலக சாம்பியன் பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய வீராங்கனை பி.வி. சிந்துவை தாம் காதலிப்பதாகவும் அவரை மணக்க உதவ வேண்டும் எனவும் ஆட்சித் தலைவரிடம் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார் 70 வயதான மலைச்சாமி.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட குறைதீர் கூட்டத்தில் தனது நூதன கோரிக்கையை மனுவாக மாவட்ட ஆட்சியரிடம் திரு மலைச்சாமி கொடுத்தார்.

அதில், தனக்கு விளையாட்டுத் துறையில் அதீத ஆர்வம் இருப்பதாகவும் இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். சிந்துவை தான் காதலித்து வருவதால் அவரை மணமுடிக்க ஆசைப்படுகிறேன் என எழுதியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், சிந்து எங்கு இருந்தாலும் அவரைத் தூக்கி கொண்டுவந்து திருமணம் முடிப்பேன் என்றும் அதற்கு மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் மலைச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார். முதியவரின் இந்தக் கோரிக்கை பலரையும் திகைப்படையச் செய்துள்ளது.