அமிர்தசரஸ்: பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு எல்லை வழியாக கஞ்சா, ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தப்படுகின்றன.
அவ்வாறு கடத்தப்படும் போதைப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். அவ்வகையில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே, இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள நிலத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 13.72 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 13ஆம் தேதி அஞ்சலா நகரின் பூங்கா கிராமத்தில் 7.5 கிலோ ஹெராயின் மற்றும் போதைப்பொருட்களுடன் ரூ.28 லட்ச ரூபாய் கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பாக சாம்ஷர் சிங் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பாகிஸ்தானைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.
சாம்ஷர் சிங் கொடுத்த தகவலின் அடிப்படையில், எல்லைப் பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் நேற்று 13.72 கிலோ ஹெராயின் போதைப்பொருட்களை அமிர்தசரஸ் புறநகர் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
பாகிஸ்தான் போதைக் கடத்தல் கும்பல், இந்திய பகுதிக்குள் போதைப் பொருட்களைச் சட்டவிரோதமாக அனுப்பி வருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

