டேராடூன்: தொலைதூர இமயமலை கிராமத்தில் விவசாயியின் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட மோதி பாக் என்ற ஆவணப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்தார்.
உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானோர் வேலை தேடி கிராமங்களைவிட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். இதனால் அங்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசாகக் கிடக்கின்றன.
இந்நிலையில் வித்யாதுத் எனும் பெரியவர் அவ்வாறு செய்யவில்லை. மற்றவர்களைப் போல் இல்லாமல் அவர் தொடர்ந்து தனது நிலத்தில் விவசாயம் செய்துகொண்டு வருகிறார்.
அதுமட்டுமின்றி தனது கிராமத்தின் அடிப்படைத் தேவைகளுக்காக அவ்வப்போது போராட்டங்களும் நடத்துகிறார். சிறுத்தைகள் வந்து கால்நடைகளை இழுத்துச் சென்றுவிடுகின்றன.
ஒரு நாள் தனது வீட்டிற்குள்ளும் சிறுத்தை வரும் என்று அவருக்கும் தெரியும் என்றாலும் மலையின் அத்தனை பகுதிகளிலும் அச்சமின்றி அவர் சுற்றித் திரிகிறார்.
இதுகுறித்து உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் கூறியதாவது:
"அரசுப் பணியில் இருந்து விலகி கடந்த 50 ஆண்டுகளாக மலைப் பகுதிகளில் விவசாயம் செய்து வருகிறார் வித்யாதுத் என்ற பெரியவர்.
"தனது கடின உழைப்பால் 84 வயதிலும் ஒரு மலைக்கிராமத்தில் தனியாக விவசாயம் செய்து வருபவரைப் பற்றிய ஆவணப் படம் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது," என்றார்.

